அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது.
நேரமில்லை! – இது நாம் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை! அதிலும் குறிப்பாக தொழுகை, நஃபிலான வணக்கங்கள், மார்க்கக் கல்வியை பயில்வது போன்ற இபாத்களைப் பற்றி பேசப்படும் போது அதிகமாக உபயோகப்படுத்தும் வார்த்தை!
நம்மில் ஒரு சராசரி முஸ்லிமின் வாழ்வை எடுத்துக்கொண்டால், அவனுடைய சிறுபிராயத்தில் காலை எழுந்தது முதல் மாலை வரை சுமார் 8 மணி நேரம் பள்ளிப்படிப்பு, பின்னர் மாலையில் ஒன்றிரண்டு மணி நேரம் டியூசன் வகுப்புகள், பின்னர் ஓரிரு மணி நேரம் விளையாட்டு என்று அவனுடைய இளம்பருவத்தின் வயது கழிகின்றது. ஓரளவு மார்க்கப்பற்றுள்ள சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்குச் செல்வதற்கு முன்னர் காலையிலோ அல்லது பள்ளிக்கூடம் சென்றுவிட்டு வந்த பின்னர் மாலையிலோ அல்-குர்ஆனை (பொருளறியாமல்) ஓதுவதற்கும் இஸ்லாத்தைப் பற்றிய அடிப்படைகளை பயில்வதற்கும் அனுப்புகின்றனர். அல்ஹம்துலில்லாஹ். ஆனால் பெரும்பாலான பெற்றோர்கள் இதை செய்வதில்லை!
முஸ்லிம்களால் நடத்தப்படுகின்ற ஒரு சில கல்விக்கூடங்களிலே உலகக் கல்வியுடன் சேர்த்து இஸ்லாத்தின் அடிப்படைகள் சிலவற்றையும் சேர்த்து கற்றுத் தருகின்றனர். இவ்வாறு மார்க்கத்தின் அடிப்படையை சிறுபிராயத்திலேயே கற்றுக் கொடுக்கும் நிறுவனங்கள் மிக மிக அரிதானதாகவே இருக்கின்றது. ஏன் இஸ்லாமியர்களால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களிலே கூட மேலை நாட்டின் நாகரீகத்தைப் பின்பற்றி அந்நிறுவனங்களிலே படிக்கின்ற குழந்தைகளுக்கு, அக்குழந்தைகளின் பெற்றோர் தனிப்பட்ட முறையில் அக்குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்தாலே தவிர, அந்தப் பள்ளியில் படிக்கின்ற குழந்தைகளுக்கு இஸ்லாமிய அறிவு என்பதே இல்லாமல் போகின்றது.
இதைவிட வேதனை என்னவென்றால், சில முஸ்லிம் பெயர்தாங்கிகளால் நடத்தப்படுகின்ற ‘முஸ்லிம் சிறுபாண்மையின’ பள்ளிக் கூடங்களிலே வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுவதற்கு கூட வாய்ப்புத் தராமல் பள்ளி நேரங்களை அமைத்திருக்கின்றார்கள். மதிய உணவுக்காக விடப்படுகின்ற சொற்ப இடைவெளி நேரத்தில் மதிய உணவருந்தினால் ஜூம்ஆவுக்குச் செல்ல இயலாது; ஜூம்ஆவுக்குச் சென்றால் மதிய உணவருந்த முடியாமல் பட்டினியாக இருக்க வேண்டியது தான்!
ஜூம்ஆவிற்கே இந்த நிலை என்றால் மற்ற நேரத் தொழுகைகளைப் பற்றி பேசவே தேவையில்லை!
இந்தச் சூழ்நிலையில் மார்க்க அறிவு அறவேயில்லாத அல்லது போதிய மார்க்க அறிவில்லாமல் வளர்க்கப்படுகின்ற அந்த சிறுவன் வாலிப பருமடைந்து கல்லூரிக்குச் சென்றால் அவன் சேருகின்ற கல்லூரியைப் பொறுத்து அவன் சிறுபிராயத்தில் நடைபெற்ற அதே நிகழ்வு ஏற்படுகின்றது.
சிறுபாண்மையினரால் நடத்தப்படுகின்ற ஒருசில கல்லூரிகளில் முஸ்லிம் மாணவர்கள் தொழுவதற்காக பள்ளிவாயில்கள் போன்றவை கட்டித் தரப்பட்டிருந்தாலும் கல்வித் தரம், கல்வி நிறுவனத்தின் மதிப்பீடு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு நம் பெரும்பாண்மையான முஸ்லிம் மாணவர்கள் விரும்புவது என்னவோ மாற்று மதத்தவர்களால் நடத்தப்படும் இஸ்லாமிய சூழல்களில்லாத கல்வி நிறுவனங்களைத் தான்! எனவே இங்கேயும் அந்த மாணவர்களால் இஸ்லாத்தைப் பற்றி பயில்வதற்கு வாய்ப்பு குறைந்து விடுகின்றது.
அவர்கள் படிப்பை முடித்தவுடன் மூஸ்லிமாக பிறந்த ஒரே காரணத்திற்காக அவர்களுக்குத் தகுந்த வேலை கிடைப்பது என்பது மிக அரிதாகவே இருக்கின்றது. அப்படியே ஒருவழியாக வேலை கிடைத்துவிட்டால் அந்த வேலையை தக்கவைத்துக் கொள்வதற்காக அரும்பாடுபட்டு உழைத்து தம் மேலதிகாரிகளை திருப்திபடுத்த வேண்டியதிருக்கின்றது.
இரவு பகல் பாராமல் கஷ்டப்பட்டு உழைத்து ஒருவழியாக நல்ல வேலையில் செட்டில் ஆனவுடன் திருமணம்! பிறகு சந்தோசமான குடும்ப வாழ்க்கை, குழந்தைகள்; பிறகு அக்குழந்தைகளுக்கு காய்ச்சல், தலைவலி என்று ஹாஸ்பிடல் அலைச்சல்; பிறகு அக்குழந்தைகளை பள்ளிக்கூடம் சேர்த்து நம்மைப் போலவே அக்குழந்தைகளையும் நல்லமுறையில் படிக்க வைத்து ஆளாக்க வேண்டும்!
அண்டை வீட்டார்களெல்லாம் புதிய சொகுசு வீடு கட்டி வசதியாக வாழ்வது போல் நாமும் புதிய பங்களா கட்டி நல்ல முறையில் வாழ வேண்டும். இதற்காக இரவு, பகல் பாராமல், நேரம் காலம் பார்க்காமல் பகுதி நேர ஊழியம் கூட பார்த்து பொருள் ஈட்ட வேண்டும்! அதற்கு நம் வாழ்நாள் முழுவதும் உழைத்தாலும் பரவாயில்லை! ரிடையர்ட் ஆனவுடன் அமைதியான முறையில் வாழவேண்டும்!
இவ்வாறாக ஒரு சராசரி முஸ்லிமின் வாழ்க்கை அலுவலகம், வீடு, மனைவி மக்களை கவனிப்பது என்று நகர்ந்துக் கொண்டிருக்கின்றது. அலுவலக நேரம் போக மீதமுள்ள நேரங்கள் டீ.வி, நியூஸ், இமெயில், இன்டர்நெட் பிரவுசிங் ஆகியவற்றுக்கே போதவில்லை!
குழந்தைகள் பருவ வயதையடைந்து பள்ளிப்பருவத்தின் இறுதியை அடைந்துவிட்டால் அவர்களை நல்ல பொறியியல் கல்லூரி அல்லது மருத்துவ கல்லூரி அல்லது பயன்தரும் படிப்பைத் தருகின்ற பிற நல்லக் கல்லூரிகளில் சேர்ப்பதற்காக அவர்களின் படிப்பின் மீது நமது நேரங்களைச் செலவிட்டு அவர்கள் நன்றாக படிக்கின்றார்களா என்பதை உறுதிசெய்ய வேண்டும். பின்னர் அவர்களை கல்லூரிகளில் சேர்ப்பதற்கு அதிகமாக கேபிடேசன் ஃபீஸ் கட்ட வேண்டும்; அதற்காக கடினமாக உழைத்து அதிக பொருளீட்ட வேண்டும்.
ஒருவழியாக அவர்கள் கல்லூரியில் சேர்ந்து படித்துப் பட்டம் பெற்று நல்ல வேலையில் அமர்ந்தவுடன் அவர்களுக்கு திருமணம் செய்வித்து அழகுபார்க்க வேண்டும். பிறகு பேரக்குழந்தைகள், அவர்களோடு கொஞ்சுவது, அகமகிழ்வது அப்பப்பா! வாழ்க்கையிலே நேரமே போதவில்லை!!
நீங்களும் இந்த சராசரி முஸ்லிமின் வட்த்திலிலுள்ளவரா! அப்படியாயின் இந்தக் கட்டுரை உங்களுக்களுக்காகத் தான். தொடர்ந்து வாசியுங்கள்!
இந்த சராசரி முஸ்லிமிடம் போய் தொழுகை, மார்க்க கல்வியைக் கற்பது பற்றிப் பேசினால் அவர்களின் உடனடி பதில் ‘நேரமில்லை’ என்பது நாம் சொல்லித் தான் தெரிய வேண்டு மென்பதில்லை!
No comments:
Post a Comment