அன்பு சகோதர, சகோதரிகளே!
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhweXDohyQvEHCRcMaLy6OM6opQSg3_dbMADi5ZK4b6zMk6suRSIkYQjaTWzCi_-LerFPQEte7z_Xf7C-wgLGw_jM8pmmex5sWJFoTgtJ-1B5X2YXq2IPADj4tbrRAy8nHaxz10ZpLloJ4/s320/time-running-out.jpg)
ஒரு முஸ்லிமின் வெற்றி என்பது மறுமையில் சுவர்க்கத்தை அடைவதாகும்! இதுவே மகத்தான வெற்றி! மறுமை வெற்றியை புறந்தள்ளியவர்களாக மறுமைக்குப் பலனளிக்காத இவ்வுலகக் கல்வியை மட்டும் பலவருடங்கள் பயின்று இவ்வுலகில் கோடி கோடியாக சம்பாதித்து இவ்வுலக வாழ்க்கையை நன்றாக அனுபவித்து வாழ்ந்தால் நிச்சயமாக அது நம்முடைய வெற்றியல்ல! மாறாக அது நம்மை மறுமையில் மிகப்பெரிய கைசேதத்தில் ஆழ்த்திவிடும். அல்லாஹ் நம்மைக் பாதுகாப்பானாகவும்.
அல்லாஹ் கூறுகின்றான்:
“(நபியே!) நீர் கூறுவீராக: ‘இவ்வுலக இன்பம் அற்பமானது, மறுவுலக(இன்ப)ம், பயபக்தியுடையோருக்கு மிகவும் மேலானது”(அல்-குர்ஆன் 4:77)
அழியக்கூடிய இவ்வுலகத்தின் அற்ப சுகங்களை அடைவதற்காக அழிவே இல்லாத மறுமை வாழ்வை புறந்தள்ளியவர்களாக இவ்வுலகக் கல்விக்கு மட்டும் முக்கியத்துவம் தந்து மார்க்கக் கல்வியைப் புறக்கணித்தோமேன்றால் அல்லாஹ்வின் எச்சரிக்கையை நினைவு கூற கடமைப்பட்டுள்ளோம்.
அல்லாஹ் கூறுகின்றான்:
“எனவே (தடுத்து நிறுத்த முடியாத மறுமைப்) பேரமளி வந்து விட்டால், அந்நாளில் மனிதன் தான் முயன்றவற்றையெல்லாம் நினைவுபடுத்திக் கொள்வான். அப்போது பார்ப்போருக்கு(க் காணும் வகையில்) நரகம் வெளிப்படுத்தப்படும். எனவே, எவன் வரம்பை மீறினானோ- இந்த உலக வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தானோ- அவனுக்கு, நிச்சயமாக நரகந்தான் தங்குமிடமாகும்” (அல்-குர்ஆன் 79:34-39)
எனவே நாம் இறைவனின் வழிகாட்டுதலின் படி நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டுமென்றால் அதற்கு மார்க்கக் கல்வியைக் கற்பது அவசியமாகும். இம்மையில் வெற்றிபெற இவ்வுலகக் கல்வி எந்த அளவிற்கு முக்கியமோ அது போல மறுமையில் வெற்றி பெற மார்க்கக் கல்வியை கற்பதும் அவசியமாகும். இதை முஸ்லிமான ஒவ்வொரு ஆண், பெண் மீதும் நபி (ஸல்) அவர்கள் கடமையாக்கியிருக்கிறார்கள்.
“ஒவ்வொரு முஃமினுக்கும் மார்க்க அறிவைப் பெறுவது கடமையாகும்” (திர்மிதி)
எனவே பெற்றோர்கள் தங்களின் குழந்தைககளை பள்ளிக்கு அனுப்பி ஒரு நாளைக்கு 8 முதல் 10 மணி நேரம் இவ்வுலகக் கல்வியைப் பயிற்றுவிக்கும் போது குறைந்தது ஒரு மணி நேரமாவது செலவழித்து மறுமைக்குப் பலனளிக்கக் கூடிய மார்க்கக் கல்வியைக் கற்றுக் கொடுப்பது அவசியமாகும். அடுத்து நம்முடைய குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் போது எந்தப் பள்ளியில் தரமான கல்வியுடன் மறுமைக்குப் பலன்தரும் மார்க்கக் கல்வியையும் சேர்த்துக் கற்றுத் தருகிறார்கள் என்பதைப் பார்த்து சேர்க்க வேண்டும்.
அடுத்து சமுதாய நலனில் அக்கரை உள்ள நமது சகோதர, சகோதரிகள் முஸ்லிம்களால் நடத்தப்படும் பள்ளிகளின் நிர்வாகிகளை சந்தித்து அவர்களுக்கு குழந்தைகளுக்கு மார்க்கக்கல்வியை போதிக்க வேண்டிய அவசியத்தை எடுத்துக்கூறி அவர்களால் நடத்தப்படும் பள்ளிகள் உலகக் கல்வியில் சிறந்து விளங்குவதோடு அல்லாமல் மறுமை வெற்றிக்கு வழிவகுக்கும் மார்க்க கல்வியையும் சேர்த்தே போதிக்கின்ற சிறந்த கல்வி நிறுவனங்களாக மாறுவதற்கு உரிய வழிவகை செய்ய வேண்டும். வசதியுடைய சகோதரர்கள் தனியாகவோ அல்லது கூட்டாகவோ இதுபோன்ற பள்ளிக்கூடங்கள் பலவற்றை உருவாக்குவதற்கு முயற்சிக்க வேண்டும்.
பன்னிரண்டாம் வகுப்பிலிருந்து வெளிவரும் ஒரு மாணவன் பொறியியல், மருத்துவம் போன்ற சிறந்த மேற்கல்விக்கு தகுதியான சிறந்த மாணவனாக வெளிவருவதோடல்லாமல் குர்ஆன், ஹதீதுகள் மற்றும் இறைவன் நமக்கருளிய சட்டத்திட்டங்களின் படி நமது வாழ்க்கையை அமைத்துக் கொண்டு அதை பிறருக்கு எடுத்துச் சொல்கின்ற அளவிற்கு சிறந்த ஆலிமாகவும் அவன் வெளிவர வேண்டும்.
இது ஒன்றும் முடியாத காரியம் இல்லை! இன்ஷா அல்லாஹ் நிச்சயமாக சாத்தியமானதே! If there is a will, there is a way!
இன்று அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் இது போன்ற கல்வி நிறுவனங்கள் பல வெற்றிகரமாக செயல்படுகின்றன. ஏன் இந்தியாவில் கூட டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் இது போன்ற கல்வி நிறுவனத்தை துவக்கி தலைசிறந்த மாணவ சமுதாயத்தை உருவாக்கி வருகின்றார். எனவே நாமும் முயற்சித்தால் இன்ஷா அல்லாஹ் நமது வருங்கால சந்ததியினர் சிறந்த மார்க்க அறிவைப் பெற்ற ஆலிம்களாகவும் அதே சமயத்தில் சிறந்த பொறியியல் வல்லுனர்களாகவும், மருத்துவ மேதைகளாகவும் திகழ்வார்கள்.
அடுத்ததாக நாம் நம்முடைய அலுவலக நேரம் போக மீதியுள்ள நேரங்களிலும், அலுவலக விடுமுறை நாட்களிலும் நமது குடும்பத்திற்காக நமது நேரத்தைச் செலவழித்தது போக எஞ்சியுள்ள நேரங்களை சினிமா, டீ.வி. சீரியல் போன்ற மார்க்கத்திற்கு முரணான காரியங்களிலும் தேவையற்ற இன்டர்நெட் சாட்டிங், பிரவுசிங் போன்ற அத்தியாவசியமற்ற செயல்களில் நம்முடைய நேரத்தை வீணடிக்காமல் நமது மறுமை வாழ்விற்குப் பலன் தரக்கூடிய மார்க்க கல்வியை கற்பது, குர்ஆனை பொருளறிந்து ஓதுவதற்கு முயற்சிப்பது, குர்ஆனின் அரபி இலக்கணத்தைப் படிப்பது, பிறருக்கு குர்ஆனை கற்றுக்கொடுப்பது, மாற்றுமதத்தவர்களுக்கு இஸ்லாத்தைக் எடுத்துச் சொல்வது போன்ற செயல்களில் ஈடுபடவேண்டும்.
ஏனெனில், நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு இஸ்லாத்தை மற்றவர்களுக்குப் போதிப்பதை இறைவன் நம்மீது விதித்திருக்கின்றான்.
“காலத்தின் மீது சத்தியமாக. நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை).” (அல் அஸ்ர் 103: 1-3).
இவ்வசனத்தின் மூலம் நஷ்டத்தில் இருந்து நம்மைக் காத்துக் கொள்வதற்காக ஒருவருக்கொருவர் உபதேசம் செய்வது அவசியம் என்பதை உணரலாம்.
எனென்றால் நம்முடைய ஒவ்வொரு மணித்துளி நேரத்திற்கும் அதை எந்த முறையில் செலவிட்டோம் என்பதை இறைவனிடம் கணக்குக்கூற கடமைப்பட்டுள்ளோம்.
“வாழ்நாளை எப்படி கழித்தான்? வாலிபத்தை எதில் ஈடுபடுத்தினான்? செல்வத்தை எப்படி சம்பாதித்து, எவ்வழியில் செலவு செய்தான்? கற்றவைகளில் எதை செயல்படுத்தினான்? என ஐந்து விசயங்கள் பற்றி விசாரிக்கப்படாத வரை மறுமை நாளில் எந்த மனிதனின் பாதமும் தன் இறைவனிடமிருந்து நகர முடியாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி); ஆதாரம்: திர்மிதி.
டி.வி, சீரியல், அரட்டை அடிப்பது, வீண் விளையாட்டுகள் மற்றும் பிற பயனற்ற வழிகளில் தமது ஓய்வு நேரத்தைச் செலவழிப்பவர்கள் பின்வரும் நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கையை மீறியவர்களாவர்கள் என்பதையும் நாம் இங்கு நினைவூட்டுகின்றோம்.
‘ஆரோக்கியம், ஓய்வு நேரம் ஆகிய இந்த இரண்டு அருட்கொடைகளை மக்கள் நஷ்டத்திற்குள்ளாக்குகிறார்கள்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) புகாரி)
அன்பு சகோதர, சகோதரிகளே!
‘நேரம் பொன் போன்றது’ – இது முதுமொழி! இஸ்லாத்தைப் பொறுத்தவரை இது உண்மைதான். ஒரே ஒரு முறை நமக்கு இவ்வுலக வாழ்வில் கிடைத்திருக்கின்ற இந்தப் பொன்னான நேரத்தை இறைவனுக்கு உவப்பான வழியில் நாம் செயல்படுத்த முயற்சிக்க வேண்டும்.
அல்லாஹ் அதற்குரிய மனவலிமையை நமக்குத் தந்து நம் அனைவரையும் அவனது நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்த்தருள்வானாகவும். ஆமீன்.
No comments:
Post a Comment