அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்...,

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..., இஸ்லாத்தை அதன் தூய வடிவத்தில் தெரிந்து கொள்ள இணைவீர் இஸ்லாமிக் மீடியா

Tuesday, August 29, 2017

துஆ செய்யும்மாறு கேட்டு கொள்கிறோம் .

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் ....,

 எல்லாம் வல்ல அல்லாஹுவின்  நல்ல அடியார்களே உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார் மீதும் இறைவனுடைய சாந்தியும்  சமாதானம் என்றும் நிலவுட்டுமாக , கடந்த சில நாட்களாக என்னால் இந்த குரூப்பில்  பதிவுகளை இட முடியவில்லை இன்ஸா அல்லாஹ் வரும் காலங்களில் பதிவுகளை போட முயற்சி செய்கிறேன். மேலும் நமது இஸ்லாமிக் மீடியா பல்வேறு பரிணாமத்தில் இஸ்லாந்தை அதன் தூய வடிவில் பிறர்க்கு எடுத்து உரைக்கும் விதமாக www.islamicmediachina.ml , இஸ்லாமியக் மீடியாவின் வார இதழ் போன்றவற்றில் விதமாக இஸ்லாத்தை தெளிவுபடுத்திக்கிறோம் , இஸ்லாம் குறித்து மாற்று மத சகோதரர்களுக்கு இஸலாத்தை தெரிந்து கொள்ள நாம் திருக்குரானை இலவசமாக வழங்குகிறோம் . இது போன்ற நற்செயல் செய்ய உங்களுடைய துஆ செய்யும்மாறு கேட்டு கொள்கிறோம் . 


இப்படிக்கு ,
இஸ்லாமியக் மீடியா அட்மின்.

Wednesday, August 23, 2017

கஃபத்துல்லாஹ் வரலாறு ஒரு பார்வை! - அனைவரும் படியுங்கள்!!

அகில உலகங்களையும் படைத்த அல்லாஹ், தான் ஒருவன் மட்டும் தான் கடவுள் என்பதற்கு, அவற்றை அத்தாட்சிகளாகவும் ஆக்கினான். இவை இன்றளவும் அல்லாஹ் மட்டும் தான் ஒரே கடவுள் என்பதற்கு ஆதாரமாகத் திகழ்கின்றன. 
அப்படிப் பட்ட அத்தாட்சிகளில் உள்ளவை தான் அவனுடைய புனிதமிக்க ஆலயமாகிய கஅபாவும் அது அமைந்துள்ள மக்கமா நகரமும் ஆகும். 
உலக முஸ்லிம்களுக்கு நேர்வழி காட்டுமிடமாகவும், உலக முஸ்லிம்களின் ஒருமைப்பாட்டைப் பறைசாற்றக் கூடியதாகவும் இவ்வத்தாட்சிகள் அமைந்துள்ளன. 
'கஅபா' ஆலயத்திற்கும், மக்கமா நகரத்திற்கும் மற்ற ஆலயங்களை விடவும், நகரங்களை விடவும் தனித்த சிறப்புகளும், சட்டங்களும் உள்ளன. அப்படிப்பட்ட சிறப்புகளில் சிலவற்றைக் காண்போம். 

உலக முஸ்லிம்களின் ஒரே கிப்லா 
கஅபா' ஆலயம் தான் உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் தொழுகையின் போது முன்னோக்கும் திசையாக அமைந்துள்ளது. இது உலக முஸ்லிம்களின் ஒருமைப்பாட்டிற்கு ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது. ஒரு முஸ்லிம் எங்கிருந்தாலும் அவன் தொழுகையின் போது கஅபாவை முன்னோக்க வேண்டும்.
நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராம் திசையில் திருப்புவீராக! எங்கே நீங்கள் இருந்தாலும் உங்கள் முகங்களை அதன் திசையிலேயே திருப்பிக் கொள்ளுங்கள்! அவர்களில் அநீதி இழைத்தோரைத் தவிர (மற்ற) மக்களுக்கு உங்களுக்கு எதிராக எந்தச் சான்றும் இருக்கக் கூடாது என்பதும், எனது அருட்கொடையை உங்களுக்கு நான் முழுமைப் படுத்துவதும், நீங்கள் நேர் வழி பெறுவதுமே இதற்குக் காரணம். (அல்குர்ஆன் 2:150)

முதல் ஆலயம் 

மக்கள் அல்லாஹ்வை மட்டும் வணங்குவதற்காக முதலில் கட்டப்பட்ட பள்ளிவாசல் மக்காவிலுள்ள 'கஅபா' ஆலயமாகும். 
அகிலத்தின் நேர்வழிக்கு உரியதாகவும், பாக்கியம் பொருந்தியதாகவும் மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில் உள்ளதாகும். (அல்குர்ஆன் 3:96)
'கஅபா' ஆலயத்தை முதன் முதலில் கட்டியவர்கள் நபி ஆதம் (அலை) அவர்களாவார்கள். அதைப் புனர் நிர்மாணம் செய்தவர்கள் நபி இப்ராஹீம் (அலை) ஆவார்கள். ஆதம் (அலை) அவர்கள் முதலில் கஅபாவைக் கட்டி, 40 வருடங்களுக்குப் பிறகு பாலஸ்தீனத்தில் உள்ள ''மஸ்ஜிதுல் அக்ஸா''வைக் கட்டினார்கள். இதற்குப் பின்வரும் செய்தி சான்றாக உள்ளது. 
நான் நபி (ஸல்) அவர்களிடம் ''பூமியில் முதலில் அமைக்கப்பட்ட பள்ளி எது?'' எனக் கேட்டேன். அதற்கு அவர்கள், 'அல் மஸ்ஜிதுல் ஹராம்' (கஅபா) என்று கூறினார்கள். பிறகு எது? என்றேன். 'அல் மஸ்ஜிதுல் அக்ஸா' என்று கூறினார்கள். ''இந்த இரண்டிற்கும் மத்தியில் எத்தனை (வருடங்கள் இடைவெளி?)'' என்று கேட்டேன். ''நாற்பது வருடங்கள்'' என்று கூறினார்கள்.அபூதர் (ரலி) புகாரி 3366
ஆதம் (அலை) அவர்களால் கட்டப்பட்ட 'கஅபா' நாளடைவில் பாழடைந்து செடி, கொடிகள் சூழப்பட்டதாக மாறியது. இஸ்மாயீல் (அலை) அவர்கள் வாலிபப் பருவத்தை அடையும் பொழுது தான் அல்லாஹ் கஅபாவைப் புணர் நிர்மாணம் செய்யுமாறு கட்டளையிடுகிறான். 
எங்கள் இறைவா! எனது சந்ததிகளை உனது புனித ஆலயத்திற்கருகில், விவசாயத்துக்குத் தகுதி இல்லாத பள்ளத்தாக்கில், இவர்கள் தொழுகையை நிறை வேற்றுவதற்காகக் குடியமர்த்தி விட்டேன். (அல்குர்ஆன் 14:37) என இப்ராஹீம் (அலை) அவர்கள் கூறினார்கள். 
ஹாஜரா, கைக்குழந்தை இஸ்மாயீலையும் பாலைவனத்தில் விட்டு வரும் போது நபி இப்ராஹீம் (அலை) மேற்கண்ட 'துஆ'வை கூறினார்கள் என்பது ஹதீஸின் (புகாரி 3364) மூலம் தெளிவாகிறது. எனவே சிதிலமடைந்த பள்ளிவாசலைத் தூய்மை செய்யுமாறும், அதன் அடித்தளத்தை உயர்த்துமாறும் அல்லாஹ் கட்டளையிடுகிறான். 
'தவாஃப் செய்வோருக்காகவும், இஃதிகாஃப் இருப்போருக்காகவும், ருகூவு, ஸஜ்தா செய்வோருக்காகவும் இருவரும் எனது ஆலயத்தைத் தூய்மைப்படுத்துங்கள்!'' என்று இப்ராஹீமிடமும், இஸ்மாயீலிடமும் உறுதி மொழி வாங்கினோம். (அல்குர்ஆன் 2:125)
அந்த ஆலயத்தின் அடித் தளத்தை இப்ராஹீமும், இஸ்மாயீலும் உயர்த்திய போது ''எங்கள் இறைவா! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக! நீயே செவியுறுபவன்; அறிந்தவன்'' (என்றனர்.) (அல்குர்ஆன் 2:127)

மக்காவிற்குப் பல பெயர்கள் உள்ளன. அவை: 
 
1. மக்கா, 2. பக்கா, 3. அல் பலதுல் அமீன் (அபயமளிக்கும் ஊர்), 4. உம்முல் குரா (நகரங்களின் தாய்), 
நபி (ஸல்) அவர்கள் மக்காவின் மீது அளப்பரிய பற்று வைத்திருந்தார்கள். அங்கேயே வாழ வேண்டும் என எண்ணினார்கள்.
''நபி (ஸல்) அவர்கள் ''ஹஸ்வா'' என்ற ஒட்டகத்தின் மீது நின்றவர்களாக மக்காவை நோக்கி, ''நீ தான் அல்லாஹ்வுடைய பூமியில் சிறந்த ஊராவாய்! அல்லாஹ்வுடைய பூமியில் மிகவும் விருப்பத்திற்குரிய ஊராவாய்! என்னுடைய சமுதாயம் (உன்னை விட்டும்) என்னை வெளியேற்றி இருக்காவிட்டால் நான் வெளியேறி இருக்க மாட்டேன். (ஆனால், அவர்களோ என்னை வெளியேற்றி விட்டார்கள்.)'' என்று கூறினார்கள். அப்துல்லாஹ் பின்அதீ (ரலி) திர்மிதீ 3860
மக்காவை நோக்கி நபி (ஸல்) அவர்கள் கூறிய இச்சொற்கள், அவர்கள் மக்காவின் மீது கொண்டுள்ள அளப்பரிய பற்றை வெளிப்படுத்துகிறது. 
அபய பூமி
மக்கமா நகரத்தை அல்லாஹ் அபயமளிக்கக் கூடிய பூமியாக ஆக்கியுள்ளான். அல்லாஹ் கூறுகிறான்: 
அபயம் அளிக்கும் புனிதத் தலத்தை அவர்களுக்காக வசிப்பிடமாக நாம் ஆக்க வில்லையா? ஒவ்வொரு கனி வர்க்கமும் நம்மிடமிருந்து உணவாக அதை நோக்கிக் கொண்டு வரப்படுகிறது. எனினும் அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள். (அல்குர்ஆன் 28:57)
அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார். (அல்குர்ஆன் 3:97)
இப்ராஹீம் (அலை) அவர்களின் 'துஆ'வின் காரணத்தால் அல்லாஹ் மக்காவைப் புனித நகரமாக்கினான். 
நபி (ஸல்) கூறினார்கள், ''இப்ராஹீம் (அலை) மக்காவை புனிதமாக்கினார். அதற்காக பிரார்த்தனை செய்தார். இப்ராஹீம் மக்காவைப் புனிதமாக்கியது போல் நான் மதீனாவைப் புனிதமாக்கி உள்ளேன். நபி இப்ராஹீம் (அலை) மக்காவிற்காக பிரார்த்தனை செய்தது போல், நான் மதீனாவிற்கு அதனுடைய ஸாவு (என்ற அளவையிலும்) முத்து (என்ற அளவையிலும் அபிவிருத்தி செய்யுமாறு) பிரார்த்தனை செய்துள்ளேன். அப்துல்லாஹ் இப்னு ஸைத் (ரலி) புகாரி. 
இப்ராஹீம் நபி செய்த பிரார்த்தனையை திருக்குர்ஆனில் அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான். 
''இறைவா! இவ்வூரைப் பாதுகாப்பு மையமாக ஆக்குவாயாக! இவ்வூராரில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பியோருக்குக் கனிகளை வழங்குவாயாக!'' (அல்குர்ஆன் 2:126) அல்லாஹ் அவருடைய பிரார்த்தனையை ஏற்று மக்காவைப் பாதுகாப்பு மையமாக ஆக்கினான்.
திருக்குர்ஆன் அபயபூமி என அறிவித்து 14 நூற்றாண்டுகளைக் கடந்த பின்பும், எத்தனையோ ஆட்சி மாற்றங்கள் நடந்த பின்பும் அது இன்றளவும் அபயபூமியாகவே உள்ளது. 14 நூற்றாண்டுகளாக எந்தத் தாக்குதலுக்கும் உள்ளாகாத வரலாற்று சிறப்பு மிக்க ஆலயமாகவும் இது இருந்து வருகிறது. குர்ஆன் இறைவனின் வார்த்தைகள் தான் என்பதற்கு இது மிகப் பெரும் சான்றாக அமைந்துள்ளது. 
மேலும் உலகத்தில் விளைகின்ற அனைத்து கனி வர்க்கங்களும் மக்காவில் தாராளமாக வந்து குவிந்து கொண்டிருப்பதும், இது இறைவனின் வார்த்தைகள் என்பதற்குச் சான்றாகத் திகழ்கிறது. 

அல்லாஹ்வுடைய பாதுகாப்பு 

'கஅபா' ஆலயத்திற்கு அல்லாஹ் தன்னுடைய நேரடிப் பாதுகாப்பை வழங்கியுள்ளான். கியாமத் நாள் வரை அதை எந்தப் படையாலும் அழித்து விட முடியாது. பின்வரும் வரலாற்றுச் சம்பவம் அதற்குச் சிறந்த சான்றாகும். 
அப்ரஹா எனும் மன்னன் தன்னுடைய யானைப் படையுடன் கஅபாவைத் தகர்ப்பதற்காக வந்தான். அவனை எதிர்த்துப் போராடக் கூடிய எந்தப் படையும் அப்போது மக்காவில் இல்லை. என்றாலும், அல்லாஹ் ஒரு வகையான பறவைகளை அனுப்பி, அந்த யானைப் படையை அழித்து தன்னுடைய ஆலயத்தைப் பாதுகாத்தான். 
இதைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான்: 
''(முஹம்மதே!) யானைப் படையை உமது இறைவன் எப்படி ஆக்கினான் என்பதை நீர் அறியவில்லையா? அவர்களின் சூழ்ச்சியை அவன் தோல்வியில் முடிக்கவில்லையா? அவர்களிடம் பறவைகளைக் கூட்டம், கூட்டமாக அனுப்பினான். சூடேற்றப்பட்ட கற்களை அவர்கள் மீது அவை வீசின. உடனே அவர்களை மெல்லப்பட்ட வைக்கோல் போல் ஆக்கினான். (அல்குர்ஆன் 105:1-5)
மேலும் கியாமத் நாள் நெருங்கும் போது ஒரு படை 'கஅபா'வை இடிப்பதற்காகப் படையெடுத்து வருவார்கள். அல்லாஹ் அவர்களையும் அழித்து கஅபாவைப் பாதுகாப்பான் என்ற செய்தியை பின்வரும் நபிமொழி மூலம் அறிந்து கொள்ளலாம்.
''ஒரு படையினர் கஅபாவின் மீது படையெடுப்பார்கள். வெட்ட வெளியான ஒரு பூமியில் அவர்கள் இருக்கும் போது அவர்களில் முதலாமவர் முதல் கடைசி நபர் வரை உயிருடன் பூமிக்குள் புதையுண்டு போவார்கள்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ''அல்லாஹ்வின் தூதரே! அவர்களில் முதலாம் நபர் முதல் கடைசி நபர் வரை எவ்வாறு புதையுண்டு போவார்கள்? அங்கு அவர்களைச் சேராதவர்களும் இருப்பார்கள். கடைவீதிகளும் இருக்குமே!'' எனக் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''முதலாமவர் முதல் கடைசி நபர் வரை புதையுண்டு போகத் தான் செய்வார்கள். எனினும் அதற்குப் பிறகு அவரவரது எண்ணத்திற்கேற்ப எழுப்பப் படுவார்கள்'' என்று கூறினார்கள். ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 2118
இறைவன் 'கஅபா' ஆலயத்திற்கு தன்னுடைய நேரடிப் பாதுகாப்பை வழங்கியிருப்பது அதனுடைய சிறப்பைக் காட்டுகிறது. 

கொலை, போர் செய்தல் கூடாது 

நகரங்களின் தாயான மக்காவிற்கு இறைவன் வழங்கியுள்ள சிறப்பு அம்சங்களில் சில: 
அங்கு கொலை செய்வதோ, போர் புரிவதோ கூடாது. மேலும் அங்குள்ள வேட்டைப் பிராணிகளை விரட்டுவதும், மரங்களை வெட்டுவதும், செடி, கொடிகளைப் பறிப்பதும் கூடாது.
''அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது (மக்களிடையே) எழுந்து நின்று, ''அல்லாஹ் வானங்களையும், பூமியையும் படைத்த போதே மக்காவை புனிதப்படுத்தி விட்டான். ஆகவே, அது அல்லாஹ் புண்ணியப்படுத்திய காரணத்தால் இறுதி நாள் வரை புனிதமானதாகும். எனக்கு முன்பும் எவருக்கும் இங்கு போர் புரிவது அனுமதிக்கப் படவில்லை. எனக்குக் கூட சிறிது நேரம் மட்டுமே இங்கு போர் புரிய அனுமதிக்கப்பட்டது. இங்குள்ள வேட்டைப் பிராணிகளை விரட்டக் கூடாது, இங்குள்ள மரங்களை வெட்டக் கூடாது. இங்குள்ள புற்பூண்டுகளைக் கிள்ளக் கூடாது. பிறர் தவற விட்ட பொருளை அதை அறிவிப்பவர் தவிர வேறெவரும் எடுக்கக் கூடாது'' என்று சொன்னார்கள். உடனே அப்பாஸ் பின் அப்துல் முத்தலிப் (ரலி) அவர்கள் ''அல்லாஹ்வின் தூதரே! 'இத்கிர்' எனும் புல்லைத் தவிரவா? ஏனெனில், அது உலோகத் தொழிலாளர்களுக்கும், வீடுகளுக்கும் தேவைப்படுகின்றதே'' என்று கேட்க நபி (ஸல்) அவர்கள் (சிறிது நேரம்) மௌனமாயிருந்து விட்டு பிறகு ''இத்கிரைத் தவிர தான். ஏனெனில் அதை வெட்டிப் பயன்படுத்துவது அனுமதிக்கப்பட்டதாகும்'' என்று பதிலளித்தார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) புகாரி 4313, 1834
புனிதமிக்க மக்கா நகரில் பாவமான காரியங்களைச் செய்வோருக்குக் கடுமையான வேதனை உள்ளது என அல்லாஹ் எச்சரித்துள்ளான். 
(ஏக இறைவனை) மறுத்தோருக்கும், அல்லாஹ்வின் பாதையை விட்டும், மஸ்ஜிதுல் ஹராமை விட்டும் தடுத்தோருக்கும், மற்றும் அங்கே அநீதியின் மூலம் குற்றம் புரிய நாடுவோருக்கும் துன்புறுத்தும் வேதனையைச் சுவைக்கச் செய்வோம். (அல்குர்ஆன் 22:25)
நபி (ஸல்) அவர்கள், ''அல்லாஹ்விடத்தில் மூன்று நபர்கள் மிகவும் வெறுப்புக்குரியவர்கள். 1. ஹரம் ஷரீஃபில் அநீதியின் மூலம் குற்றம் புரிபவன், 2. இஸ்லாத்தில் அறியாமைக் கால நடைமுறையை நாடக்கூடியவன், 3. தகுந்த காரணமின்றி ஒரு உயிரைப் பறிக்க நாடுபவன். இப்னு அப்பாஸ் (ரலி) புகாரி 6882

காஃபிர்கள் நுழைவதற்குத் தடை 

இஸ்லாமிய வணக்கத்தலங்களான பள்ளிவாசல்களுக்கு மற்றவர்கள் வருவதை இஸ்லாம் தடுக்கவில்லை. ஆயினும் உலகின் ஒரே இறைவனை வணங்குவதற்கு எழுப்பப்பட்ட முதல் ஆலயமான கஃபா மற்றும் அதன் வளாகத்திற்கு மட்டும் பல கடவுள் நம்பிக்கை கொண்டவர்களை அனுமதிக்கக்கூடாது என அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான். 
நம்பிக்கை கொண்டோரே! இணை கற்பிப்போர் அசுத்தமானவர்களே. எனவே அவர்கள் மஸ்ஜிதுல் ஹராமை இவ்வாண்டுக்குப் பின் நெருங்கக் கூடாது (அல்குர்ஆன் 9:28) 
ஹஜ்ஜத்துல் வதாவுக்கு முந்தைய வருடம் நபி (ஸல்) அவர்கள் அபூபக்கர் (ரலி) தலைமையில் மக்களை ஹஜ்ஜுக்கு அனுப்பி வைத்தார்கள். துல்ஹஜ் பிறை பத்தாம் நாள், ''எச்சரிக்கை! இந்த வருடத்திற்குப் பின்னர் இணை வைப்பவர்கள் யாரும் ஹஜ் செய்யக் கூடாது. கஅபாவை நிர்வாணமாகத் தவாஃப் செய்யக் கூடாது'' என அறிவிக்கச் செய்தார்கள். அபூஹுரைரா (ரலி) புகாரி 1622
பல கடவுள் கொள்கை கொண்டவர்களைத் தடை செய்வது மனித நேயத்திற்கு எதிரானது என்று கருதக் கூடாது. 
ஏனெனில் கஃபாவை அபய பூமியாக இறைவன் அமைத்துள்ளான். அந்த ஆலயத்திற்கும், அதன் வளாகத்திற்கும் தனிச் சட்டங்கள் உள்ளதைப் பார்த்தோம். அங்கே பகை தீர்க்கக் கூடாது; புல் பூண்டுகளைக் கூட கிள்ளக் கூடாது என்பன போன்ற விதிகள் உள்ளன. 
இந்தச் சிறப்பான விதிகளை இஸ்லாத்தை ஏற்றவர்களால் தான் கடைப்பிடிக்க இயலும். உலகம் அழியும் நாள் வரை அறிவிக்கப் பட்டுள்ள அபயபூமியாக அது அமைந்துள்ளதால் தான் இவ்வாறு மற்றவர்களுக்கு அங்கே தடை விதிக்கப்படுகிறது. ஆனால் மற்ற பள்ளிவாயில்களில் அவர்கள் செல்வதற்கு எந்தத் தடையுமில்லை. 

புனிதப் பயணம் மேற்கொள்ளுமிடம்

இஸ்லாத்தில் மூன்று இடங்களைத் தவிர வேறு எங்கும் புண்ணியத்தை நாடி பயணம் செய்வது கூடாது. அவ்வாறு செய்வது பாவமான காரியமாகும். 
புண்ணியத்தை நாடி பயணம் செய்யும் மூன்று இடங்களில் முதலாவது இடமாக நபி (ஸல்) அவர்கள் கஃபதுல்லாஹ்வைக் கூறியுள்ளார்கள். 
''(புண்ணியத்தைத் தேடி) மூன்று பள்ளிவாசல்களைத் தவிர வேறு எங்கும் பயணம் மேற்கொள்ளக் கூடாது. 1. அல் மஸ்ஜிதுல் ஹராம், 2. மஸ்ஜிதுன் நபவி, 3. மஸ்ஜிதுல் அக்ஸா'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூஸயீதுல் குத்ரீ (ரலி) புகாரி 1189
மேலும் செல்வமும், உடல் வலிமையும் உடையவர்கள் தம்முடைய வாழ்நாளில் ஒரு தடவையாவது ''கஃபா'' ஆலயம் சென்று ''ஹஜ்'' செய்வது கட்டாயக் கடமையாகும். 
அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. (அல்குர்ஆன் 3:97)

அளவற்ற நன்மை 

'கஅபா' ஆலயத்தில் தொழுகின்ற ஒரு தொழுகை மற்ற பள்ளிகளில் தொழுகின்ற ஒரு இலட்சம் தொழுகைகளை விட அதிகமான நன்மைகள் நிறைந்ததாகும். 
என்னுடைய பள்ளி (மஸ்ஜிதுன் னபவி)யில் தொழுவது மற்ற பள்ளிகளில் தொழுகின்ற ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும். அல் மஸ்ஜிதுல் ஹராம் (கஅபா)வைத் தவிர! (ஏனென்றால் அதற்கு அதை விட அதிகமான நன்மைகள் உள்ளது.) அபூஹுரைரா (ரலி) புகாரி 1190
''மஸ்ஜிதுல் ஹராமில் ஒரு தொழுகை தொழுவது மற்ற பள்ளிகளில் ஒரு இலட்சம் தொழுகை தொழுவதை விடச் சிறந்ததாகும்'' என நபி (ஸல்) கூறியுள்ளார்கள். ஜாபிர் (ரலி) இப்னுமாஜா 1396, அஹ்மத் 14167 

எந்நேரமும் வழிபடலாம் 

நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட நேரங்களில் தொழுவதற்குத் தடை விதித்துள்ளார்கள். அந்நேரங்களில் தொழுவது கூடாது. உதாரணத்திற்கு சூரியன் உதிக்கும் போதும், உச்சியிலிருக்கும் போதும், மறையத் துவங்கும் பொழுதும் தொழுவது கூடாது. 
ஆனால் இந்தத் தடை ''கஅபா''விற்கு மட்டும் கிடையாது. அங்கு எந்நேரமும் தொழுது கொள்ளலாம். வணக்க வழிபாடுகளை நிறைவேற்றலாம். நபி (ஸல்) அவர்கள், அப்து மனாஃப் குடும்பத்தினரே! இரவிலோ, பகலிலோ எந்த நேரத்திலும், ஒருவர் தான் நாடிய பொழுது இந்த (கஅபா) வீட்டை வலம் வருபவரையோ, தொழுபவரையோ தடுக்காதீர்கள்.
ஜுபைர் இப்னு முத்இம்(ரலி) திர்மிதீ 795 

தஜ்ஜாலை விட்டும் பாதுகாப்பு 

இறுதி நாளின் அடையாளங்களில் ஒன்று தஜ்ஜாலின் வருகையாகும். இவன் உலகினுடைய அனைத்துப் பகுதிகளுக்கும் செல்வான். ஆனால் மக்காவிற்கும், மதீனாவிற்கும் மட்டும் செல்ல முடியாது. 
''மக்கா, மதீனாவைத் தவிர, தஜ்ஜால் கால் வைக்காத எந்த ஊரும் இருக்காது. அவற்றின் (மக்கா, மதீனா) ஒவ்வொரு நுழைவு வாயிலிலும் மலக்குகள் அணிவகுத்து அவனைத் தடுத்தவர்களாக இருப்பார்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அனஸ் பின் மாலிக் (ரலி) புகாரி 1881, முஸ்லிம் 5236

கஅபா இடிக்கப்படுதல் 

கியாமத் நாள் வரை கஅபாவில் ஒவ்வொரு ஆண்டும் ஹஜ் செய்யப்படும். கஅபாவில் ஹஜ் செய்யப்படாத நாள் வந்த பிறகே கியாமத் நாள் ஏற்படும். 
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தார் வந்த பிறகும் இவ்வாலயத்தில் ஹஜ்ஜும் செய்யப்படும். உம்ராவும் செய்யப்படும். 'கஅபா'வில் ஹஜ் செய்யப்படாத நாள் வந்த பிறகே கியாமத் நாள் வரும். அபூஸயீத் (ரலி) புகாரி 1593.
கஅபாவில் ஹஜ் செய்யப்படாத நாள் வரும் போது சிலர் அதனை இடித்துப் பாழ்படுத்துவார்கள். இதைப் பற்றி அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி புகாரியில் இடம் பெற்றுள்ளது. 
நபி (ஸல்) அவர்கள், அபீஸீனியாவைச் சேர்ந்த மெலிந்த கால்களைக் கொண்ட மனிதர்கள் கஅபாவை இடித்துப் பாழ்படுத்துவார்கள் கூறினார்கள். புகாரி 1591, 1896
''வெளிப்பக்கமாக வளைந்த கால்களை உடைய, கருப்பு நிறத்தவர்கள், ஒவ்வொரு கல்லாகப் பிடுங்கி கஅபாவை உடைப்பதை நான் பார்ப்பது போன்றிருக்கிறது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) புகாரி 1595.
கியாமத் நாள் வரும் வரை தான் அல்லாஹ் கஅபாவை அபய பூமியாகவும், பாதுகாப்புத் தலமாகவும் ஆக்கியுள்ளான். எனவே கியாமத் நாள் வரும் போது ''கஅபா'' இடிக்கப்படுவது இறைவனுடைய பாதுகாப்புக்கு எதிரானது கிடையாது. 

நல்லுணர்வு பெறுவோம் 

இப்னு உமர் (ரலி), நபி (ஸல்) அவர்கள் மினாவில் இருந்த போது ''இது எந்த நாள் என்பதை நீங்கள் அறிவீர்களா?'' எனக் கேட்டார்கள். அதற்கு மக்கள், ''அல்லாஹ்வும், அவன் தூதருமே நன்கறிவர்!'' என்றனர். உடனே அவர்கள், ''இது புனிதமிக்க தினமாகும்! இது எந்த நகரம் என்பதை நீங்கள் அறிவீர்களா?'' என்று கேட்க மக்கள் ''அல்லாஹ்வும் அவன் தூதருமே நன்கறிவர்!'' என்றனர். அவர்கள் (இது) ''புனிதமிக்க நகரமாகும்!'' என்றனர். பிறகு நபி (ஸல்) அவர்கள், ''இது எந்த மாதம் என்பதை அறிவீர்களா?'' என்றதும் மக்கள், ''அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்கறிவர்'' என்றனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ''இது புனிதமிக்க மாதமாகும்'' எனக் கூறிவிட்டு, ''உங்களுடைய இந்தப் புனித நகரத்தில், உங்களுடைய இந்தப் புனித மாதத்தில், உங்களுடைய இந்த நாள் எவ்வளவு புனிதமானதோ அது போலவே அல்லாஹ் உங்கள் உயிர்களையும், உடைமைகளையும், உங்கள் மானம் மரியாதைகளையும் புனிதமாக்கியுள்ளான்!'' எனக் கூறினார்கள்.புகாரி 1742

இப்படிப்பட்ட புனிதங்களை உணர்ந்து அதன் மூலம் படிப்பினை பெற்று வாழக்கூடிய மக்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கியருள்வானாக!



குர்பானி

தினம் ஒரு நபி மொழி

நபி (ஸல்) அவர்கள் தமது குர்பானி ஒட்டகங்களை பலியிடுமாறும் அவற்றின் இறைச்சி தோல் சேணம் ஆகிய அனைத்தையும் பங்கிடுமாறும்; உரிப்பதற்கு கூலியாக அவற்றில் எதையும் கொடுக்கக்கூடாது என்றும் எனக்குக் கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பாளர் : அலீ (ரலி)

நூல் : புகாரி (1717)

Sunday, August 20, 2017

அறிந்து கொள்ளவோம்-21

குடும்பத்தினர் ஆஜராக வேண்டுமா⁉


குர்பானி கொடுக்கும் போது குடும்பத்தினர் அனைவரும் கட்டாயம் வந்து நிற்க வேண்டும் என்று கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இது ஃபாத்திமா ! எழு! உன்னுடைய பிராணியிடத்தில் ஆஜராகு! ஏனெனில் குர்பானி பிராணியின் முதலாவது சொட்டு இரத்தம் விழும் போதே உனது அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்பட்டு விடுகின்றன. மேலும் இந்தப் பிராணி மறுமை நாளில் இதனுடைய இரத்தமும் மாமிசமும் எழுபது மடங்கு கூடுதலாகக் கொண்டு வரப்படும். இதை உன்னுடைய மீஸானில் (நன்மைத் தட்டில்) வைக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய போது அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! இந்த பாக்கியம் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தினருக்குரியதா? அல்லது எல்லா மக்களுக்கும் உரியதா? எனக் கேட்டார்கள். முஹம்மதுடைய குடும்பத்திற்கும் எல்லா மக்களுக்கும் பொதுவானது தான் என பதிலளித்தார்கள்.


🗣அறிவிப்பவர் : அலீ (ரலி) மற்றும் இப்ரான் பின் ஹுஸைன் (ரலி)
📚நூல் : பைஹகீ (19161) (19162)

💢📖இந்த ஹதீஸைப் பதிவு செய்த இமாம் பைஹகீஅவர்களே இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான அமீர் பின் காலித் பலவீனமானவர் என்று குறிப்பிட்டுள்ளார்கள். ஆகையால் குடும்பத்தினர் வந்து நிற்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இதில் கூறப்பட்டுள்ள சிறப்புகளும் நபி (ஸல்) அவர்களின் கூற்றாகாது.

💢👨‍👩‍👧‍👦ஆனால் அறுப்பதைப் பார்க்க குடும்பத்தினர்கள் விரும்பி அவர்களாகவே முன்வந்தால் அதில் எந்த குற்றமும் இல்லை. ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள் குர்பானி கொடுக்கும் போது அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் நின்று பார்த்துள்ளார்கள்.

சஹர் நேரத்தில் உறங்குதல்.

தினம் ஒரு நபி மொழி
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். 
'அல்லாஹ்விற்கு மிகவிருப்பமான தொழுகை தாவூது(அலை) அவர்களின் தொழுகையாகும். அல்லாஹ் விற்கு மிக விருப்பமான நோன்பு தாவூது(அலை) அவர்களின் நோன்பாகும். அவர்கள் பாதி இரவு வரை தூங்குவார்கள். பிறகு இரவில் மூன்றில் ஒரு பகுதி நேரம் தொழுவார்கள். பிறகு ஆறில் ஒரு பகுதி நேரம் உறங்குவார்கள். மேலும் ஒரு நாள் நோன்பு வைத்து ஒரு நாள் நோன்பைவிட்டு விடுவார்கள்'. 
இதை அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி) அறிவித்தார். 

புஹாரி1131

அறிந்து கொள்ளவோம்-20

நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன் போனில் பேசலாமா?

கூடாது.

ஆண் பெண்ணை மணமுடித்த பிறகு தான் அவள் அவனுக்கு சொந்தமாகிறாள். திருமணம் தான் இவர்கள் இருவரையும் இணைக்கும் பந்தமாக உள்ளது. இதைப் பின்வரும் ஹதீஸிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

5141حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ أَبِي حَازِمٍ عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ امْرَأَةً أَتَتْ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَعَرَضَتْ عَلَيْهِ نَفْسَهَا فَقَالَ مَا لِي الْيَوْمَ فِي النِّسَاءِ مِنْ حَاجَةٍ فَقَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ زَوِّجْنِيهَا قَالَ مَا عِنْدَكَ قَالَ مَا عِنْدِي شَيْءٌ قَالَ أَعْطِهَا وَلَوْ خَاتَمًا مِنْ حَدِيدٍ قَالَ مَا عِنْدِي شَيْءٌ قَالَ فَمَا عِنْدَكَ مِنْ الْقُرْآنِ قَالَ كَذَا وَكَذَا قَالَ فَقَدْ مَلَّكْتُكَهَا بِمَا مَعَكَ مِنْ الْقُرْآنِ رواه البخاري

சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறினார்கள் :
ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, தன்னை மணந்து கொள்ளுமாறு வேண்டினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “இப்போது எனக்கு (மணப்) பெண் தேவையில்லை’ எனக் கூறினார்கள். அப்போது ஒரு மனிதர், “அல்லாஹ்வின் தூதரே! இவளை எனக்கு மணமுடித்து வையுங்கள்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், “உம்மிடம் (மஹ்ர் செலுத்த) என்ன உள்ளது?” என்று கேட்டார்கள். அவர், “என்னிடம் எதுவுமில்லை” என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், “இரும்பாலான மோதிரத்தையேனும் இவளுக்கு (மஹ்ராகக்) கொடு!” என்று சொன்னார்கள். அவர், “என்னிடம் ஏதுமில்லை” என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், “சரி, குர்ஆனில் ஏதேனும் உம்மிடம் (மனனமாய்) உள்ளதா?” என்று கேட்டார்கள். அவர், “இன்னது இன்னது (மனனமாய்) உள்ளது” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், “உம்முடனுள்ள குர்ஆன் அத்தியாயங்களுக்காக இவளை உமக்கு உரியவளாக்கி விட்டேன்” என்று சொன்னார்கள்.

புகாரி (5141)

எனவே திருமணத்துக்குப் பிறகு தான் பெண் ஆணுக்கு உரியவளாகிறாள். மேலும் ஆணுடைய காதலுக்கும் அவனுடைய கொஞ்சலுக்கும் உரியவள் மனைவி தான் என்று அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்.

وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُمْ مِنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُمْ مَوَدَّةً وَرَحْمَةً إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَتَفَكَّرُونَ(21)30

நீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.

அல்குர்ஆன் (30 : 21)

எனவே நாம் பெண் பேசியிருந்தாலும் அப்பெண்ணை மணந்து கொள்ளாதவரை அவள் நமக்கு அந்நியப் பெண் தான். ஒரு அந்நியப் பெண்ணிடம் நாம் எந்த ஒழுங்கு முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டுமோ அதே போன்று தான் நமக்கு பேசி முடிக்கப்பட்ட பெண்ணிடமும் நடந்து கொள்ள வேண்டும்.

ஆணும் பெண்ணும் தனித்திருக்கக் கூடாது என்று இஸ்லாம் கூறுகிறது.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“ஒரு பெண்ணுடன் எந்த (அந்நிய) ஆடவனும் தனிமையில் இருக்க வேண்டாம்; (மண முடிக்கத் தகாத) நெருங்கிய ஆண் உறவினருடன் அவள் இருக்கும் போது தவிர; ஒரு பெண் (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய ஆணுடன் தவிர பயணம் மேற்கொள்ள வேண்டாம்” என்று நபி (ஸல்) அவர்கள் (தமது) சொற் பொழிவில் குறிப்பிட்டார்கள்.(ஹதீஸின் சுருக்கம்)

முஸ்லிம் 2611

தனிமை என்பது இருவரும் நேரடியாகச் சந்திப்பதை மட்டும் குறிக்காது. தொலைபேசியில் இருவர் மட்டும் உரையாடினாலும் அதுவும் தனிமை தான்.

தனிமையில் இருப்பதை இஸ்லாம் தடை செய்யக் காரணம், இருவரும் தனிமையில் இருக்கும் போது ஷைத்தானிய செயல்களில் ஈடுபட்டு விடக்கூடும் என்பதற்காகத் தான். திருமணம் பேசிவைக்கப்பட்ட ஒரு பெண்ணுடன் ஒருவர் தொலைபேசியில் தனிமையில் உரையாடும் போது அதற்கான வாசல்கள் இன்னும் அதிகமாகத் திறந்து விடப்படுகின்றன என்பதையும் நாம் கூடுதலாக கவனத்தில் கொள்ள வேண்டும்
தீய பேச்சுக்களை பேசுவது நாவு செய்யும் விபச்சாரம் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்

6612 حَدَّثَنِي مَحْمُودُ بْنُ غَيْلَانَ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ ابْنِ طَاوُسٍ عَنْ أَبِيهِ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ مَا رَأَيْتُ شَيْئًا أَشْبَهَ بِاللَّمَمِ مِمَّا قَالَ أَبُو هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ كَتَبَ عَلَى ابْنِ آدَمَ حَظَّهُ مِنْ الزِّنَا أَدْرَكَ ذَلِكَ لَا مَحَالَةَ فَزِنَا الْعَيْنِ النَّظَرُ وَزِنَا اللِّسَانِ الْمَنْطِقُ وَالنَّفْسُ تَمَنَّى وَتَشْتَهِي وَالْفَرْجُ يُصَدِّقُ ذَلِكَ أَوْ يُكَذِّبُهُ رواه البخاري

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

விபசாரத்தில் மனிதனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான். (மர்ம உறுப்பின் விபசாரம் மட்டுமல்ல; கண்ணும் நாவும்கூட விபசாரம் செய்கின்றன.) கண் செய்யும் விபசாரம் (தவறான) பார்வையாகும். நாவு செய்யும் விபசாரம் (பாலுணர்வைத் தூண்டும்) பேச்சாகும். மனம் ஏங்குகிறது; இச்சை கொள்கிறது. மர்ம உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது. அல்லது பொய்யாக்குகிறது. அறிவிப்பவர். அபூஹுரைரா (ரலி). 

நூல் : புகாரி (6612



நிச்சயம் செய்யப்பட்ட எத்தனையோ திருமணங்கள் பல காரணங்களால் இடையில் முறிந்து விடுகின்றது. இந்நேரங்களில் ஆணையும் பெண்ணையும் பிரித்து வைப்பதற்கு தலாக் குலாஃ போன்ற மணவிலக்குச் சட்டங்களை நாம் இங்கே கடைபிடிப்பதில்லை. இவர்களுக்கிடையே கணவன் மனைவி உறவு ஏற்படவில்லை என்பதே இதற்குக் காரணம்.

அதேப் போல் ஒரு பெண்ணுக்கு பேசப்பட்ட ஆண் திருமணத்துக்கு முன்பு இறந்துவிட்டால் இப்போது அப்பெண் இத்தா இருக்க வேண்டுமா என்று கேட்டால் தேவையில்லை என்று கூறுவோம். இவர்களுக்கிடையே கணவன் மனைவி உறவு ஏற்படவில்லை என்பதே இதற்குக் காரணம்.

எனவே இந்த பிரச்சனைகளில் எல்லாம் இவ்விருவருக்கும் இடையே கணவன் மனைவி உறவு இருக்கின்றதா? என நாம் பார்ப்பது போல தனக்குப் பேசப்பட்ட பெண்ணிடம் நெருங்கி பழகுவதற்கும் அவளிடம் ஃபோனில் கொஞ்சி குலாவுவதற்கும் இந்த உறவு உள்ளதா?  என்று பார்க்க வேண்டும்.



நிச்சயிக்கப்பட்டவனுடன் எல்லை மீறி பழகி இருந்த நிலையில் திருமணம் தடைப்பட்டால் அந்தப் பெண்ணின் எதிர்காலம் பெரிதும் பாதிக்கப்படும். திருமணத்துக்கு முன்பே இவள் எப்படி நடந்து கொண்டால் என்ற விமர்சனம் எழும். இதனால் அவளுக்கு வேறு திருமணம் நடைபெறுவது பாதிக்கப்படும் என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஆண் தனக்கு பேசிமுடிக்கப்பட்ட பெண்ணிடம் மணிக்கணக்கில் பேசுவதை இன்றைய சமுதாயம் தவறாக நினைப்பதில்லை. இதை ஒரு பிரச்சனையாக எடுத்துக் கொள்வதில்லை. அதே நேரத்தில் திருமணத்துக்கு முன்பு ஆண் அப்பெண்ணுடன் ஒட்டி உறவாடினால் அவளுடன் உடலுறவு கொண்டால் அதைப் பாரதூரமான விஷயமாகக் கருதுகிறார்கள். 

சுருக்கமாகச் சொல்வதாக இருந்தால் ஒரு அந்நியப் பெண்ணிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என ஆண்களுக்கு இஸ்லாம் வழிகாட்டி இருக்கின்றதோ அதே ஒழுங்கு முறைகளை தனக்கு பேசிமுடிக்கப்பட்ட பெண்ணிடமும் கடைப்பிடிக்க வேண்டும்.

வீட்டைக் கட்டிப்பார். திருமணத்தை நடத்திப்பார் என்ற பழமொழிக்கு ஏற்ப திருமணத்தை பாரதூரமான விஷயமாக சமுதாயம் ஆக்கிவிட்ட காரணத்தால் பெண் பேசப்பட்டு திருமணத்துக்காக பல வருடங்கள் ஆண்கள் காத்திருக்க வேண்டியிருக்கின்றது. இஸ்லாம் காட்டாத விதிமுறைகளை நம்மீது நாமே விதித்துக் கொள்வதால் தான் இவ்வாறு மார்க்க வரம்புகளை மீறக்கூடிய சூழ்நிலை நமக்கு ஏற்படுகிறது.

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பெண் பேசுதல் என்றால் அதன் பொருள் திருமணத்துக்கு பெண்ணிடம் அனுமதி வேண்டுதல் என்பது தான் அர்த்தம். பெண் அனுமதி கொடுத்து விட்டால் பெண் பேசச் சென்ற அதே இடத்தில் கூட சாட்சிகளுடன் பெண்ணுடைய பொறுப்பாளர் முன்னிலையில் திருமணத்தை முடித்து விடலாம்.

இதைத் தான் நாம் முன்பு சுட்டிக் காட்டிய ஹதீஸ் கூறுகிறது.

இதைச் சமுதாயம் புரிந்து கொண்டால் பெண் பேசிவிட்டு ஆணையும் பெண்ணையும் நீண்ட காலம் பிரித்து வைக்கும் நிலை ஏற்படாது.

தினம் ஒரு நபி மொழி

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:  ”ஒருவர் (தொழுவதற்காக) நடந்து வரும் பாதையில் ஒரு முள் மரக்கிளை கிடப்பதைக் கண்டு, அதை அந்தப் பாதையைவிட்டும் அகற்கும் பணியில் ஈடுபட்டார். அப்பணி அவரை (ஆரம்ப நேரத்தில் தொழுவதைவிட்டும்) பிற்படுத்திவிட்டது. இப்படிப்பட்ட அந்த மனிதருக்கு அல்லாஹ் நன்றி செலுத்துகிறான். அவருக்குப் பாவமன்னிப்பும் அளிக்கிறான்.”  என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி 652அத்தியாயம் : 10. பாங்கு

அறிந்து கொள்ளவோம்-19

ஹஜ் செய்தால் முன்னர் செய்த பெரும்பாவங்கள் மன்னிக்கப்படுமா?

மனிதனுக்கு செய்தவையன்றி, மற்றவை மன்னிக்கப்படும்.

இறைவனுக்காக மனத்தூய்மையான முறையில் ஒருவர் ஹஜ்ஜை நிறைவேற்றினால் நிச்சயமாக அவர் முன்னர் செய்த பெரும்பாவங்கள் மன்னிக்கப்படும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தாம்பத்திய உறவு மற்றும் பாவச் செயல்களில் ஈடுபடாமல் ஒருவர் அல்லாஹ்வுக்காகவே ஹஜ் செய்தால் அவர் அவருடைய தாய் அவரைப் பெற்றெடுத்த நாளில் இருந்ததைப் போன்று (பாவமறியாப் பாலகராகத்) திரும்புவார்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : புகாரி (1521)

அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : அல்லாஹ் என் உள்ளத்தில் இஸ்லாத்தை ஊட்டினான். அப்போது நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று ”உங்கள் வலக் கரத்தை நீட்டுங்கள். நான் உங்களிடம் உறுதிப் பிரமாணம் (பைஅத்) அளிக்கிறேன்” என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள் தமது வலக் கரத்தை நீட்டினார்கள். உடனே நான் எனது கையை இழுத்துக்கொண்டேன். நபி (ஸல்) அவர்கள், ”அம்ரே! உமக்கு என்ன ஆயிற்று?” என்று கேட்டார்கள். நான், ”சில நிபந்தனைகளை விதிக்க விரும்புகிறேன்” என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள், ”என்ன நிபந்தனை விதிக்கப்போகிறீர்?” என்று கேட்டார்கள். ”என் (முந்தைய) பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டும்” என்று கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், ”முந்தைய பாவங்களை இஸ்லாம் அழித்துவிடும்; ஹிஜ்ரத்தும் முந்தைய பாவங்களை அழித்துவிடும்; ஹஜ்ஜும் முந்தைய பாவங்களை அழித்துவிடும் என்று உமக்குத் தெரியாதா?” என்று கேட்டார்கள். (பிறகு நான் இஸ்லாத்தைத் தழுவினேன்.)
நூல் : முஸ்லிம் (192)

மேற்கண்ட நபிமொழிகள் ஹஜ் முந்தைய பாவங்களை அழித்து விடும் என்பதற்கு சான்றாகத் திகழ்கின்றன. ஆனால் இவற்றில் மனிதன் மனிதனுக்குச் செய்கின்ற பாவங்கள் அடங்காது. ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு அநீதி இழைத்தால் பாதிக்கப்பட்ட மனிதன் மன்னித்தாலே தவிர இறைவன் மன்னிக்க மாட்டான். பாதிக்கப்பட்வன் மன்னிக்கா விட்டால் மறுமையில் இவனுடைய நன்மைகளை பாதிக்கப்பட்டவனுக்கு வழங்கி அல்லது பாதிக்கப்பட்டவனின் தீமைகளை அநீதி இழைத்தவன் மீது சுமத்தி அல்லாஹ் நீதி வழங்குவான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர், தன் சகோதரனுக்கு அவனது மானத்திலோ, வேறு (பணம், சொத்து போன்ற) விஷயத்திலோ இழைத்த அநீதி (ஏதும் பரிகாரம் காணப்படாமல்) இருக்குமாயின், அவர் அவனிடமிருந்து அதற்கு இன்றே மன்னிப்புப் பெற்றுக் கொள்ளட்டும். தீனாரோ, திர்ஹமோ (பொற்காசுகளோ வெள்ளிக் காசுகளோ) பயன் தரும் வாய்ப்பில்லாத நிலை (ஏற்படும் மறுமை நாள்) வருவதற்கு முன்னால் (மன்னிப்புப் பெற்றுக் கொள்ளட்டும்.) (ஏனெனில், மறுமை நாளில்) அவரிடம் நற்செயல் ஏதும் இருக்குமாயின் அவனது அநீதியின் அளவுக்கு அவரிடமிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டு (அநீதிக்குள்ளானவரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு) விடும். அநீதியிழைத்தவரிடம் நற்செயல்கள் எதுவும் இல்லையென்றால் அவரது தோழரின் (அநீதிக்குள்ளானவரின்) தீய செயல்கள் (அவர் கணக்கிலிருந்து) எடுக்கப்பட்டு அநீதியிழைத்தவரின் மீது சுமத்தப்பட்டு விடும்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : புகாரி ( 2449)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (அறப்போரில் கொல்லப்பட்ட) உயிர்த் தியாகியின் அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்பட்டுவிடுகின்றன; கடனைத் தவிர.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி ) நூல் : முஸ்லிம் (3832)
எனவே ஹஜ் செய்வதின் மூலம் பெரும் பாவங்கள் மன்னிக்கப்டும் என்பதில் மனிதன் மனிதனுக்குச் செய்த அநீதிகள் அடங்காது என்பதுதான் சரியானதாகும். அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன்.

பாவச் செயல் எதுவும் கலவாத ஹஜ்ஜின் சிறப்பு.

தினம் ஒரு நபி மொழி
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 
'செயல்களில் சிறந்தது எது?' என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. 'அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்புவது' என்றார்கள். 'அதற்குப் பிறகு எது (சிறந்தது)?' எனக் கேட்கப்பட்டபோது, 'இறைவழியில் போர்புரிதல்' என்றார்கள். 'அதற்குப் பிறகு எது (சிறந்தது?)' எனக் கேட்கப்பட்டபோது 'பாவச் செயல் எதுவும் கலவாத ஹஜ்' என்று பதிலளித்தார்கள். 

புஹாரி 1519

Tuesday, August 1, 2017

அறிந்து கொள்ளவோம்-18


தத்தெடுப்பது கூடுமா?

குழந்தைகளைத் தத்து எடுத்து வளர்ப்பதற்கு மார்க்கத்தில் தடையில்லை. ஆனால் அதே சமயம் எடுத்து வளர்ப்பதால் தந்தை, மகன் என்ற உறவோ, வாரிசுரிமையோ ஏற்பட்டு விடாது. நாம் ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்கிறோம் என்றால் அந்தக் குழந்தையின் தந்தை பெயருக்குப் பதிலாக நம்முடைய பெயரைப் பயன்படுத்துவதற்கு அனுமதியில்லை.

இஸ்லாத்தின் ஆரம்ப கட்டத்தில் ஒருவர் ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்தால் அக்குழந்தைக்கு அவர் தான் தந்தை என்று கருதும் வழக்கம் இருந்தது. வளர்ப்பு மகன் தன்னை எடுத்து வளர்த்தவருக்கு வாரிசாகி வந்தார். பின்பு இஸ்லாம் இதைத் தடை செய்து விட்டது.

குழந்தையை வளர்க்கும் பொறுப்பை ஏற்கும் அதே வேளையில் அக்குழந்தையின் தந்தை எவரோ அவர் தான் அக்குழந்தைக்குத் தந்தையாக எப்போதும் இருப்பார். வளர்ப்பவர் ஒருக்காலும் தந்தையாக முடியாது. வளர்க்கப்பட்டவர் வளர்த்தவருக்கு வாரிசாகவும் முடியாது என்று புதிய சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இதைப் பின்வரும் வசனமும் ஹதீஸ்களும் தெளிவுபடுத்துகின்றன.

அவர்களை அவர்களின் தந்தையருடனே சேர்த்து அழையுங்கள்! அதுவே அல்லாஹ்விடம் நீதியானது. அவர்களின் தந்தையரை நீங்கள் அறியா விட்டால் அவர்கள் உங்களின் கொள்கைச் சகோதரர்களும், உங்கள் நண்பர்களுமாவர். தவறுதலாக நீங்கள் கூறி விடுவதில் உங்கள் மீது குற்றம் இல்லை. மாறாக உங்கள் உள்ளங்களால் தீர்மானித்துக் கூறுவதே (குற்றமாகும்). அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

அல்குர்ஆன் (33 : 5)

4000حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ حَدَّثَنَا اللَّيْثُ عَنْ عُقَيْلٍ عَنْ ابْنِ شِهَابٍ أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ أَبَا حُذَيْفَةَ وَكَانَ مِمَّنْ شَهِدَ بَدْرًا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَبَنَّى سَالِمًا وَأَنْكَحَهُ بِنْتَ أَخِيهِ هِنْدَ بِنْتَ الْوَلِيدِ بْنِ عُتْبَةَ وَهُوَ مَوْلًى لِامْرَأَةٍ مِنْ الْأَنْصَارِ كَمَا تَبَنَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ زَيْدًا وَكَانَ مَنْ تَبَنَّى رَجُلًا فِي الْجَاهِلِيَّةِ دَعَاهُ النَّاسُ إِلَيْهِ وَوَرِثَ مِنْ مِيرَاثِهِ حَتَّى أَنْزَلَ اللَّهُ تَعَالَى ادْعُوهُمْ لِآبَائِهِمْ رواه البخاري

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பத்ருப் போரில் கலந்து கொண்டவர்களில் ஒருவரான அபூ ஹுதைஃபா (ரலி) அவர்கள் சாலிமைத் தம் வளர்ப்பு மகனாக ஆக்கிக் கொண்டார்கள். அவருக்குத் தம் சகோதரரின் மகளான ஹிந்த் பின்த் வலீத் பின் உத்பாவைத் திருமணமும் செய்து வைத்தார்கள். சாலிம் ஓர் அன்சாரிப் பெண்ணின் அடிமையாக இருந்தவர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸைதை வளர்ப்பு மகனாக ஆக்கிக் கொண்டது போல (சாலிமை, அபூ ஹுதைஃபா -ரலி- அவர்கள் வளர்ப்பு மகனாக்கிக் கொண்டார்கள்.) மேலும், அறியாமைக் காலத்தில் ஒருவரை அவருடைய வளர்ப்புத் தந்தை(யின் பெயர்)உடன் இணைத்து மக்கள் அழைப்பதும் அவரது சொத்துக்கு வாரிசாக (வளர்ப்பு மகனை) ஆக்கும் பழக்கமும் இருந்து வந்தது. “வளர்ப்புப் புதல்வர்களை அவர்களின் சொந்தத் தந்தை(யின் பெயர்) உடன் இணைத்து அழையுங்கள்” என்னும் (33:5) வசனத்தை அல்லாஹ் அருளும் வரையில் (இந்தப் பழக்கம் நீடித்தது.)

புகாரி (4000)

4782 حَدَّثَنَا مُعَلَّى بْنُ أَسَدٍ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ الْمُخْتَارِ حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ قَالَ حَدَّثَنِي سَالِمٌ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ زَيْدَ بْنَ حَارِثَةَ مَوْلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا كُنَّا نَدْعُوهُ إِلَّا زَيْدَ بْنَ مُحَمَّدٍ حَتَّى نَزَلَ الْقُرْآنُ ادْعُوهُمْ لِآبَائِهِمْ هُوَ أَقْسَطُ عِنْدَ اللَّهِ رواه البخاري

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

“வளர்ப்புப் புதல்வர்களை அவர்களின் சொந்தத் தந்தையுடன் சேர்த்தே அழையுங்கள். இதுவே அல்லாஹ்விடம் நீதியாகும்” எனும் (33:5ஆவது) குர்ஆன் வசனம் அருளப்படும் வரை, நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட (அவர்களின் வளர்ப்பு மகன்) ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்களை “ஸைத் பின் முஹம்மத்’ (முஹம்மதின் புதல்வர் ஸைத்) என்றே அழைத்து வந்தோம்.

புகாரி (4782)

வளர்ப்புக் குழந்தைக்கு வாரிசுரிமை ஏற்படாது. எனினும் ஒருவர் விரும்பினால் தனது வளர்ப்பு மகனுக்கு மரண சாசனம் (உயில்) மூலம் சொத்தை எழுதி வைக்கலாம்.

(பாகப் பிரிவினை என்பது) அவர் செய்த மரண சாசனத்தையும் கடனையும் நிறைவேற்றிய பின்னரே.

அல்குர்ஆன் 4:11

செய்யப்பட்ட மரண சாசனம், மற்றும் கடனுக்குப் பிறகே (பாகம் பிரிக்கப்பட வேண்டும்.)

அல்குர்ஆன் 4:12

பொதுவாக மரண சாசனம் செய்ய அனுமதி உள்ளதை இந்த வசனத்திலிருந்து அறியலாம். ஆயினும் இவ்வாறு செய்யும் மரண சாசனம் மூன்றில் ஒரு பகுதியைத் தாண்டக் கூடாது. மூன்று லட்சம் ரூபாய் சொத்துக்களை விட்டுச் செல்பவர் ஒரு லட்சம் ரூபாய் அளவுக்குத் தான் மரண சாசனம் செய்யும் உரிமை படைத்துள்ளார்.

ஒருவர் முழுச் சொத்துக்கும் மரண சாசனம் எழுதி வைத்தாலும் மூன்றில் ஒரு பங்கு அளவுக்குத் தான் அது செல்லும். எஞ்சியவை இஸ்லாம் கூறும் முறைப்படி வாரிசுகளுக்குப் பங்கிடப்பட வேண்டும்.

விடை பெறும் ஹஜ்ஜின் போது நபி (ஸல்) அவர்கள் நோயுற்றிருந்த என்னை விசாரிக்க வந்தார்கள். அந்த நோயினால் நான் இறப்பின் விளிம்புக்கே சென்று விட்டிருந்தேன். நான், “அல்லாஹ்வின் தூதரே! நான் ஒரு செல்வந்தன். எனக்கு ஒரேயொரு மகளைத் தவிர வேறு எவரும் இல்லை. இந்நிலையில் நீங்கள் பார்க்கின்ற வேதனை என்னை வந்தடைந்து விட்டது. ஆகவே நான் என் செல்வத்தில் மூன்றில் இரண்டு பங்கை தர்மம் செய்து விடட்டுமா?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் வேண்டாம் என்று சொன்னார்கள். “அப்படியென்றால் அதில் பாதியைத் தர்மம் செய்து விடட்டுமா?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “மூன்றில் ஒரு பங்கு! ஸஅதே! மூன்றில் ஒரு பங்கே அதிகம் தான். நீங்கள் உங்கள் வாரிசுகளை மக்களிடம் கையேந்தும் ஏழைகளாக விட்டு விட்டுச் செல்வதை விட தன்னிறைவு பெற்றவர்களாக விட்டுச் செல்வதே சிறந்ததாகும். நீங்கள் அல்லாஹ்வின் திருப்தியை நாடிச் செலவழிக்கும் எதுவாயினும் அதற்குரிய பிரதிபலனை அல்லாஹ் உங்களுக்கு அளித்தே தீருவான். உங்கள் மனைவியின் வாயில் நீங்கள் ஊட்டும் ஒரு கவள உணவாயினும் சரியே!” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸஅத் (ரலி)

நூல்: புகாரி 3936, 4409, 5668, 6373

மேலும் குழந்தையை தத்தெடுத்து வளர்க்கும் பெண்கள் அக்குழந்தைக்குத் தாயாக முடியாது. அக்குழந்தை திருமணம் முடிக்க தடைசெய்யப்பட்ட நெருங்கிய உறவினராக முடியாது.

எனவே அக்குழந்தை பருவ வயதை அடைந்து விட்டால் ஒரு அந்நியரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் ஒழுங்கு முறைகளைக் கற்றுக் கொடுத்துள்ளதோ அந்த ஒழுங்கு முறைகளைப் பேணி நடந்து கொள்ள வேண்டும்.

உதாரணமாக தன்னால் வளர்க்கப்பட்டவருடன் தனியாக இருப்பது, பர்தா அணியாமல் அவருக்கு முன்னால் காட்சி தருவது போன்றவை கூடாது. அந்நிய ஆணுடைய அந்தஸ்த்தையே அவருக்குக் கொடுக்க வேண்டும்.

தொழுகையில் ஊசலாட்டங்களை ஏற்படுத்தக்கூடிய ஷைத்தானிடமிருந்து (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோரல்.

தினம் ஒரு நபி மொழி
 அபுல்அலாஉ அல்ஆமிரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உஸ்மான் பின் அபில்ஆஸ் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, "அல்லாஹ்வின் தூதரே! (நான் தொழுது கொண்டிருக்கும்போது) எனக்கும் எனது தொழுகைக்கும் எனது ஓதலுக்குமிடையே ஷைத்தான் தடையாய் நின்று எனக்குக் குழப்பத்தை ஏற்படுத்துகிறான்" என்று கூறினார்கள்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவன்தான் "கின்ஸப்" எனப்படும் ஷைத்தான் ஆவான். அவனை நீங்கள் உணர்ந்தால் அவனிடமிருந்து காக்குமாறு அல்லாஹ்விடம் கோரி, உங்கள் இடப் பக்கத்தில் மூன்று முறை துப்பிவிடுங்கள்" என்று கூறினார்கள். அவ்வாறே நான் செய்தபோது, என்னிடமிருந்து அவனை அல்லாஹ் அப்புறப்படுத்திவிட்டான்.
புஹாரி4431.

அறிந்து கொள்ளவோம்-17

மரணத்துடன் முடிவுக்கு வரும் செயல்பாடுகள்!


மனிதன் மரணித்து விட்டால் மூன்று விஷயங்கள் தவிர அவனது எல்லா செயல்பாடுகளும் முடிவுக்கு வரும் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பினவருமாறு விளக்கியுள்ளனர்.

மனிதன் மரணித்து விட்டால் அவன் செய்த நிலையான தர்மம், பயனுள்ள கல்வி, தனக்காகப் பிரார்த்தனை செய்யும் நல்ல பிள்ளை ஆகிய மூன்றைத் தவிர அவனது மற்ற செயல்பாடுகள் முடிந்து விடுகின்றன என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 3358

நிலைத்திருக்கும் வகையிலான தர்மங்களைச் செய்து விட்டு ஒருவன் மரணித்து விட்டால், மற்றவர்கள் அதில் பயன் பெறும்போதெல்லாம் இவனுக்கு நன்மைகள் கிடைக்கின்றன. கிணறு வெட்டுதல், மரம் நடுதல், நிழற்குடை அமைத்தல் போன்றவற்றைப் பொதுப் பயன்பாட்டுக்கு விட்டுச் செல்வது தான் நிலையான தர்மம் எனப்படும்.

இவற்றைச் செய்தவன் மரணித்து விட்டாலும் இவற்றில் மக்கள் பயனடையும் காலம் வரை இவனுக்கு நன்மைகள் கிடைக்கின்றன. ஆகையால் இந்த விஷயத்தில் இவனது செயல்பாடு இன்னும் முடிவுக்கு வரவில்லை.

பயனுள்ள கல்வியைப் பிறருக்குச் சொல்லிக் கொடுத்து ஒருவன் மரணித்து விட்டால் அவனிடம் கற்றவர்கள் மூலம் மற்றவர்கள் பயனடைவார்கள். யாரெல்லாம் இவ்வாறு பயனடைகிறார்களோ அவர்களின் அந்த நன்மையில் இவனுக்கும் ஒரு பங்கு கிடைத்துக் கொண்டே இருக்கும். இந்த வகையில் இவனது செயல்பாடு இன்னும் முடிவுக்கு வரவில்லை.

தனது பிள்ளையை நல்ல முறையில் வளர்த்து விட்டு ஒருவன் மரணித்து விட்டால் அந்தப் பிள்ளை இவனுக்காகப் பிரார்த்தனை செய்யும் போது அதனால் இவனுக்கு நன்மைகள் சேர்கின்றன. எனவே இந்த விஷயத்திலும் அவனது செயல்பாடுகள் முடிவுக்கு வரவில்லை.

இம்மூன்றைத் தவிர மனிதனின் எல்லா செயல்பாடுகளும் முடிந்து விடுகின்றன என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாக அறிவித்து விட்டார்கள்.

இறந்தவர் அல்லாஹ்விடம் நல்லடியாராக இருந்தால் கூட அவரால் நமக்கு எந்த உதவியும் செய்ய முடியாது என்பதை இந்த ஹதீஸிலிருந்தும் அறியலாம்.

அறிந்து கொள்ளவோம்-16

வெளியில் செல்லும் பெண்கள் நறுமணம் இடலாமா?

நறுமணப் பொருட்கள் இரு வகைகளில் உள்ளன.
தனது உடலி -ல் துர்வாடை இருக்கக் கூடாது என்பதற்காக பயன்படுத்தும் மென்மையான நறுமணமும் உண்டு. ஆட்களை தன் பக்கம் இழுக்கும் வகையிலான நறுமணமும் உண்டு. முதல் வகையான நறுமணம் அருகில் நெருங்கி வருவோருக்கும் மட்டுமே உணர முடியும். இரண்டாம் வகை நறுமணம் தூரத்தில் போகும் நபரையும் சுண்டி இழுத்து திரும்பிப் பார்க்க வைக்கும்.
பெண்கள் வீட்டுக்குள் இருக்கும் போது இரண்டு வகையான நறுமணங்களையும் பூசிக் கொள்ளலாம். ஆனால் வெளியே செல்லும் போது முதல் வகையான நறுமணப் பொருட்களை மட்டுமே பயன்படுத்தலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இரண்டு வகையான நறுமணப்பொருட்கள் இருந்துள்ளன.
و حدثنا عمرو بن سواد العامري حدثنا عبد الله بن وهب أخبرنا عمرو بن الحارث أن سعيد بن أبي هلال وبكير بن الأشج حدثاه عن أبي بكر بن المنكدر عن عمرو بن سليم عن عبد الرحمن بن أبي سعيد الخدري عن أبيه أن رسول الله صلى الله عليه وسلم قال غسل يوم الجمعة على كل محتلم وسواك ويمس من الطيب ما قدر عليه إلا أن بكيرا لم يذكر عبد الرحمن وقال في الطيب ولو من طيب المرأة
வெள்ளிக்கிழமை குளிப்பதும் பல் துலக்குவதும் பருவமடைந்த அனைவர் மீதும் கடமையாகும். மேலும் தன்னால் இயன்ற நறுமணத்தையும் பூசிக் கொள்ள வேண்டும். (நறுமணப் பொருள் இல்லாத பட்சத்தில்) பெண்களுக்கான நறுமணப் பொருளையாவது பூசிக் கொள்ள வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் கூறினார்கள். நூல் முஸ்-லி ம் 1400
ஆண்களின் நறுமணமும் பெண்களின் நறுமணமும் அன்று தனித்தனியாக இருந்துள்ளன என்பதையும் அதை நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் அங்கீகரித்துள்ளார்கள் என்பதையும் இதில் இருந்து அறிந்து கொள்ளலாம்.
حدثنا محمد بن بشار حدثنا يحيى بن سعيد القطان عن ثابت بن عمارة الحنفي عن غنيم بن قيس عن أبي موسى عن النبي صلى الله عليه وسلم قال كل عين زانية والمرأة إذا استعطرت فمرت بالمجلس فهي كذا وكذا يعني زانية وفي الباب عن أبي هريرة قال أبو عيسى هذا حديث حسن صحيح
ஒவ்வொரு கண்ணும் விபச்சாரம் செய்கிறது. ஒரு பெண் நறுமணம் பூசிக் கொண்டு (ஆண்களின்) சபைக்குச் சென்றால் அவள் விபச்சாரம் செய்பவள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல் : திர்மிதி 2710
கண்கள் விபச்சாரம் செய்கிறது எனக் கூறி விட்டு பெண்கள் நறுமணம் பூசுவது பற்றி நபிகள் நாயகம் கூறுவதால் ஆண்கள் சபைக்குச் சென்று அவர்கள் அப்பெண்ணை ஏறெடுத்துப் பார்க்கும் நிலையை ஏற்படுத்துவதால் அவளும் விபச்சாரி எனக் கூறியுள்ளனர்.
மற்றொரு ஹதீஸில்
أخبرنا إسمعيل بن مسعود قال حدثنا خالد قال حدثنا ثابت وهو ابن عمارة عن غنيم بن قيس عن الأشعري قال قال رسول الله صلى الله عليه وسلم أيما امرأة استعطرت فمرت على قوم ليجدوا من ريحها فهي زانية
தனது நறுமணத்தை மற்றவர்கள் நுகர வேண்டும் என்ற நோக்கத்துக்காக ஒரு பெண் நறுமணம் பூசிக் கொண்டு சென்றால்
அவள் விபச்சாரி என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகின்றனர். நஸாயீ 5036
அன்னிய ஆண்களைக் கவரும் நோக்கத்தில் நறுமணம் பூசி செல்வதையே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டித்துள்ளார்கள் என்பதையும்
அவ்வாறு இல்லாமல் நறுமணம் பூசிக் கொண்டு செல்ல தடை இல்லை என்பதையும் இதில் இருந்து ஊகம் செய்யலாம். இன்னும் சொல்லப் போனால் தெளிவாக அனுமதிக்கும் ஹதீஸ்களும் உள்ளன.
حدثنا أبو بكر بن أبي شيبة حدثنا يحيى بن سعيد القطان عن محمد بن عجلان حدثني بكير بن عبد الله بن الأشج عن بسر بن سعيد عن زينب امرأة عبد الله قالت قال لنا رسول الله صلى الله عليه وسلم إذا شهدت إحداكن المسجد فلا تمس طيبا
உங்களில் ஒருத்தி பள்ளிவாசலுக்கு வருவதாக இருந்தால் அவர் நறுமணம் பூச வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக முஸ்லி -ம் 674 வது ஹதீஸ் கூறுவதைப் பொதுவான தடைக்கு ஆதாரமாக சிலர் காட்டுவது ஏற்க முடியாததாகும்.
ஏனெனில் இது இஷாத் தொழுகைக்கு அதாவது இரவுக்கு மட்டும் உள்ள தடை என்பதைப் பின்வரும் ஹதீஸ்கள் விளக்குகின்றன.
حدثنا هارون بن سعيد الأيلي حدثنا ابن وهب أخبرني مخرمة عن أبيه عن بسر بن سعيد أن زينب الثقفية كانت تحدث عن رسول الله صلى الله عليه وسلم أنه قال إذا شهدت إحداكن العشاء فلا تطيب تلك الليلة
உங்களில் ஒருத்தி இஷாவுக்கு வருவதாக இருந்தால் அவர் நறுமணம் பூச வேண்டாம் என்று நபிகள் நாயகம் ஸல் கூறி
னார்கள். முஸ்-லி ம் 673
இந்த ஹதீஸையும் முந்திய ஹதீஸையும் ஸைனப் என்ற சஹாபி தான் அறிவிக்கிறார். எனவே அவர் பொதுவாக அறிவிப்பதை விட குறிப்பாக அறிவிப்பதைத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் இந்த அறிவிப்பை அபூஹுரைரா அவர்களின் அறிவிப்பும் உறுதி செய்கின்றது. அது வருமாறு:
حدثنا يحيى بن يحيى وإسحق بن إبراهيم قال يحيى أخبرنا عبد الله بن محمد بن عبد الله بن أبي فروة عن يزيد بن خصيفة عن بسر بن سعيد عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم أيما امرأة أصابت بخورا فلا تشهد معنا العشاء الآخرة
எந்தப் பெண்ணாவது நறு மணப் புகை பூசிக் கொண்டால் அவள் நம்மோடு இஷா தொழுகைக்கு வர வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் அபூ ஹுரைரா (ர-லி ) நூல் முஸ்லி -ம் 675
எனவே இஷா தொழுகைக்குப் போகும் போது நறுமணம் பூசிக் கொண்டு செல்லக் கூடாது என்றால் அது இஷாவுக்கு மட்டும் உரியது என்று புரிந்து கொள்ளலாம். அது இரவில் நறுமணம் பூசிக் கொண்டு செல்லக் கூடாது என்ற கருத்தையும் தரும் என்றும் புரிந்து கொள்ளலாம். மற்ற நேரங்களில் பெண்கள் ஆண்களைச் சுண்டி இழுக்கும் வகையிலான நறுமணமாக இல்லாமல் சாதாரண நறுமணம் பூசி வெளியே செல்ல
அனுமதி உண்டு என்பதை இந்த ஹதீஸ்கள் உணர்த்துகின்றன.

வெட்கம் இறை நம்பிக்கையின் ஓர் அம்சம்.

 தினம் ஒரு நபி மொழி
'அன்சாரிகளைச் சேர்ந்த ஒருவர் தம் சகோதரர் (அதிகம்) வெட்கப்படுவதைக் கண்டித்துக் கொண்டிருந்தபோது அவ்வழியே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சென்றார்கள். உடனே, 'அவரை(க் கண்டிக்காதீர்கள்;)விட்டு விடுங்கள். ஏனெனில், நிச்சயமாக வெட்கம் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் ஓரம்சமாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். புஹாரி 24