முன்னுரை
நாம் எந்த ஒரு வணக்கத்தைப் புரிந்தாலும் அதை நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்தவாறு செய்ய வேண்டும். நாம் விரும்பியவாறு செய்தால் அந்த செயல் அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. தொழுகை நோன்பு போன்ற வணக்கங்களை எப்படி நிறைவேற்ற வேண்டும் என்பதை நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியதைப் போல் குர்பானியின் சட்டங்களையும் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
ஆனால் குர்பானி தொடர்பாக பல தவறான நம்பிக்கைகள் மக்களிடத்தில் நிலவுகின்றன. ஆகையால் குர்ஆன் மற்றும் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலை அடிப்படையாகக் கொண்டு குர்பானி தொடர்பான சட்டங்கள் இப்புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ளது. எல்லாப்புகழும் இறைவனுக்கே.
குர்பானியின் பின்னணி
இஸ்மாயீல் (அலை) அவர்களைத் தனக்காக அறுத்துப் பலியிட வேண்டும் என்று இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் கனவில் அறிவித்தான்.
இப்ராஹீம் (அலை) தள்ளாத வயதில் இஸ்மாயில் (அலை) அவர்களைப் பெற்றெடுத்ததால் அதிகப் பாசம் அவர்களிடம் இருந்தது. ஆனாலும் அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்ற வேண்டும் என்ற உறுதியில் மகனை அறுக்க முற்பட்டார்கள்.. அப்போது ஷைத்தான் அவர்களுடைய மனதில் தீய எண்ணங்களை ஏற்படுத்தினான். ஆனால் இப்ராஹீம் (அலை) ஷைத்தானிற்குக் கட்டுப்படாமல் இறைக் கட்டளையை நிறைவேற்றத் துணிந்தார்கள்.
அவர்களின் இந்தத் தியாகத்தை அல்லாஹ் ஏற்றுக்கொண்டு இஸ்மாயீல் (அலை) அவர்களைப் பலியிடுவதற்கு பதிலாக ஒரு பிராணியைப் பலியிடுமாறு கட்டளையிட்டான். இந்த விவரங்கள் திருக்குர்ஆனின் 37 வது அத்தியாயத்தில் 100 முதல் 111 வது வசனம் வரை கூறப்படுகிறது.
என் இறைவா! எனக்கு நல்லொழுக்கம் உடையவரை (வாரிசாகத்) தருவாயாக! (என்று இப்ராஹீம் கேட்டார்.) அவருக்கு சகிப்புத்தன்மை மிக்க ஆண் குழந்தை பற்றி நற்செய்தி கூறினோம். அவருடன் உழைக்கும் நிலையை அவர் (இஸ்மாயீல்) அடைந்த போது என் அருமை மகனே! நான் உன்னை அறுப்பது போல் கனவில் கண்டேன். நீ என்ன கருதுகிறாய் என்பதைச் சிந்தித்துக் கூறு” என்று கேட்டார். என் தந்தையே! உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதைச் செய்யுங்கள்! அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளனாகக் காண்பீர்கள்” என்று பதிலளித்தார்.
இருவரும் கீழ்ப்படிந்து (தமது) மகனை அவர் முகம் குப்புறக் கிடத்திய போது, இப்ராஹீமே! அக்கனவை நீர் உண்மைப்படுத்தி விட்டீர். நன்மை செய்வோருக்கு இவ்வாறே நாம் கூலி வழங்குவோம்” என்று அவரை அழைத்துக் கூறினோம். இது தான் மகத்தான சோதனை. பெரிய பலிப்பிராணியை அவருக்குப் பகரமாக்கினோம். பின்வருவோரில் அவரது புகழை நிலைக்கச் செய்தோம். இப்ராஹீமின் மீது ஸலாம் உண்டாகும்! நன்மை செய்வோருக்கு இவ்வாறே கூலி வழங்குவோம். அவர் நம்பிக்கை கொண்ட நமது அடியார்களில் ஒருவர்.
அல்குர்ஆன் (37 : 100)
*இன்ஷா அல்லாஹ் தொடரும்...*