அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்...,

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..., இஸ்லாத்தை அதன் தூய வடிவத்தில் தெரிந்து கொள்ள இணைவீர் இஸ்லாமிக் மீடியா

Monday, March 20, 2017

லுஹா தொழுகை

தினம் ஒரு நபி மொழி


'ஆதமின் மகனே! எனக்காகப் பகலின் ஆரம்பத்தில் நான்கு ரக்அத்கள் தொழு! பகலின் கடைசிக்கு நான் உனக்குப் பொறுப்பேற்கிறேன்' என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். [அறிவிப்பவர்: அபூதர் (ரலி), நூல்கள்: திர்மிதீ 438, அஹ்மத் 26208]

ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்குமாறும், லுஹா நேரத்தில் இரண்டு ரக்அத்துகள் தொழுமாறும், உறங்குவதற்கு முன் வித்ரு தொழுகையைத் தொழுமாறும் ஆகிய இம்மூன்று விஷயங்களை என் தோழர் நபி (ஸல்) அவர்கள் எனக்கு அறிவுறுத்தினார்கள். [அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி 1981, முஸ்லிம் 1182]

3 கூட்டத்தினர், சுவனம் நுழையமாட்டார்கள்..!!!



அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது.

உலகில் உள்ள அனைத்து மதங்களை விட இஸ்லாம் மார்க்கமே பிறருக்கு கொடுத்து உதவுகின்ற ஈகைத் தன்மையை அதிகமாக போதித்து அதை முஸ்லிம்களின் ஐம்பெருங் கடமைகளில் ஒன்றாகவும் ஆக்கியிருக்கிறது. மேலும் இறைவனால் கட்டளையிடப்பட்டுள்ள இந்த கடமையை நிராகித்தவர் உண்மையான முஸ்லிமாக இருக்கமுடியாது.

தான் ஈட்டிய செல்வத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியை வறியவர்களுக்கும் இறைவன் தன்னுடைய திருமறையில் குறிப்பிடப்பட்டுள்ளவர்களுக்கும் பகிர்நதளிக்க வேண்டும் என்று வரையறுத்துள்ள இஸ்லாம் அவ்வாறு தாம் செய்த தர்மங்களை, தாம் செலுத்திய ஏழை வரியாகிய ஜக்காத்தைப் பிறருக்கு சொல்லிக் கான்பித்தல் கூடாது என்றும் கட்டளையிடுகிறது.

நம்மில் பலர் இறைவனின் ஆனைக்குக் கட்டுப்பட்டு இறைவனிடம் மறுமையில் அதிக நன்மைகளைப் பெறவேண்டும் என்ற பேராவலில் தர்மம் செய்வது யாரென்றே தெரியாதவாறு வாரி வழங்கும் வள்ளல்களாக இருக்கின்றனர். தமது வலது கரம் கொடுப்பது இடது கரத்திற்குத் தெரியாதவாறு கொடுக்கின்றனர். அல்லாஹ் இத்தைகயவர்களுக்காக மறுமையில் மிகச் சிறந்த நற்பேறுகளை இன்ஷா அல்லாஹ் வழங்குவான். மேலும் அல்லாஹ்வின் அர்ஷின் நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத மஹ்ஷரிலே தன்னுடைய அர்ஷின் நிழலிலே இத்தகையவர்களுக்கு இடம் வழங்குகின்றான்.

ஆனால் சிலர், தன்னுடைய சுய விளம்பரத்திற்காகவும் தம்மை வள்ளல் எனப் பிறர் புகழ வேண்டுமென்பதற்காகவும் தினசரிகளில் விளம்பரம் செய்தும் போஸ்டர் அடித்து ஒட்டியும் தங்களின் ஈகைத் தனத்தை தாங்களே மெச்சிக் கொள்கின்றனர்.

இன்னும் சிலரோ ஆரம்பத்தில் வறியவர்களின் மேலுள்ள அனுதாபத்தால் அவர்களுக்கு உதவுகின்றனர். ஆனால் ஒரு சூழ்நிலையில் இறைவனின் அருளினால் அத்தகைய ஏழைகள் பொருளாதார வளர்ச்சியில் முன்னுக்கு வந்தவுடன் ஆரம்பத்தில் அவர்களுக்கு உதவியவர்கள் ஷைத்தானின் சூழ்ச்சிக்கு உட்பட்டு தம்மால் உதவி பெற்றவர்களை நோக்கி, ‘என்னால் தான் நீ முன்னுக்கு வந்தாய்’, ‘ நான் தான் நீ இத்தைகய நிலைக்கு உயர உதவி செய்தேன்’, ‘நான் உனக்கு உதவி செய்யாவிட்டால் உன்னுடைய நிலை என்ன?’ என்பது போன்ற சில வார்த்தைகளை அவர்களிடம் நேரிடையாகவோ அல்லது பிறரிடமோ கூறி உதவி பெற்றவர்களின் மனம் நோகும்படி சில சமயங்களில் பேசி விடுகின்றனர். ஆனால் இவ்வாறு செய்த உபகாரத்தைப் பிறரிடம் சொல்லிக்காட்டுவது இஸ்லாத்தில் பெரும்பாவமாகும்.

அல்லாஹ் கூறுகிறான்:

"நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாமல், மனிதர்களுக்குக் காட்டுவதற்காகவே தன் பொருளைச் செலவழிப்பவனைப்போல், கொடுத்ததைச் சொல்லிக் காண்பித்தும்,

நோவினைகள் செய்தும் உங்கள் ஸதக்காவை (தான தர்மங்களைப்) பாழாக்கி விடாதீர்கள்;
அ(ப்படிச் செய்ப)வனுக்கு உவமையாவது: ஒரு வழுக்குப் பாறையாகும்;
அதன் மேல் சிறிது மண் படிந்துள்ளது;
அதன் மீது பெருமழை பெய்து (அதிலிருந்த சிறிது மண்ணையும் கழுவித்) துடைத்து விட்டது;
இவ்வாறே அவர்கள் செய்த -(தானத்)திலிருந்து யாதொரு பலனையும் அடைய மாட்டார்கள்;
இன்னும், அல்லாஹ் காஃபிரான மக்களை நேர் வழியில் செலுத்துவதில்லை" (அல்-குர்ஆன் 2:264)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்கிறார்கள்: மூன்று கூட்டத்தினர் சுவனம் நுழையமாட்டார்கள்:

1) பெற்றோரை நிந்திப்பவன் 
2) மதுவில் மூழ்கியிருப்பவன்
3) செய்த நன்மைகளை சொல்லிக்காட்டுபவன். (ஆதாரம் : நஸயி, ஹாக்கிம், பஸ்ஸார்)

"சதி செய்பவனும், உலோபியும் செய்த தர்மங்களைச் சொல்லிக்காட்டுபவனும் சுவர்க்கம் நுழையமாட்டார்கள் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்" (ஆதாரம் : நஸயி, திர்மிதி)

எனவே சகோதர சகோதரிகளே! நமது அரும்பாடுபட்டு செய்த, சேகரித்த நன்மைகளை பிறருக்கு சொல்லிக்காட்டுதல் என்ற இழிசெயிலின் மூலம் இழப்பது என்பது மிகப்பெரிய கைச்சேதம் அன்றோ?

அல்லாஹ் இத்தகைய இழிசெயலிருந்து நம்மனைவரையும் பாதுகாப்பானாகவும்.

நோன்பின்_சட்டங்கள்

தினம் ஒரு நபி மொழி

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“பொய்யான பேச்சையும்

பொய்யான நடவடிக்கைகளையும்விட்டு விடாதவர்

தம் உணவையும் பானத்தையும்விட்டு விடுவதில்

 அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை!“

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

ஷஹீஹ் புகாரி 1903

நாளை இந்த நிலை, உனக்கும் வரலாம்...!

அவர் அறிஞர். செல்வந்தரும் கூட. தனக்கு மரணம் நெருங்குவதாக உணர்ந்தார். தன் மகனை அருகில் அழைத்தார்.

மரண சாசனம் போல ஒன்றைச் சொன்னார்: "என் அருமை மகனே, விரைவில் நான் உங்களனைவரையும் விட்டுப் பிரிந்து விடுவேன். என்னுடலைக் குளிப்பாட்டி சடலத்துணி (கஃபன்) சுற்றுவீர்கள். அப்போது என்னுடைய ஒரேயொரு வேண்டுகோளை நிறைவேற்றுவாயா?"

"என்னவென்று சொல்லுங்கள் தந்தையே!" என்றான் மகன்.

அறிஞர் கூறினார் : "என் சடலம் அதற்குரிய துணியால் சுற்றப்படும் போது, என்னுடைய பழைய காலுறைகளில் ஒன்றை என் கால்களில் அணிவித்துவிடு. இதுதான் என் எளிய கோரிக்கை"

ஊரில் மிகப் பெரும் செல்வந்தர் தன் தந்தை. ஆனால், என்ன இது விசித்திரமான கோரிக்கை என்று நினைத்துக் கொண்டாலும், எளிய ஒன்று தானே என்று மகனும் ஒப்புக் கொண்டான்.

அதற்கடுத்த சில நாள்களில் அந்த முதியவர், தன் சொத்துகளையும், மனைவி மக்களையும் விட்டுவிட்டு மாண்டுப் போனார். அவரை உலகிலிருந்து விடை கொடுத்து அனுப்ப உறவினர்களும் நண்பர்களும் குழுமிவிட்டனர். உடல் குளிப்பாட்டப்பட்டது. பிரேத ஆடை உடலில் சுற்றப்படும் நேரம் நெருங்கியது. அப்போது மகனுக்கு தந்தையின் வேண்டுகோள் நினைவுக்கு வந்தது. மெல்ல எழுந்து, குளிப்பாட்டிய வரிடம் சென்று தந்தையின் ஒரு காலுறையைக் கொடுத்து "இதனை என் தந்தையின் கால்களில் அணிவியுங்கள்; இதுவே அவரின் இறுதி விருப்பமாகும்" என்று கூறினான்.

"முடியாது; முடியவே முடியாது" மறுத்தார் குளிப்பாட்டும் பணியாளர். "இல்லை, இது என் தந்தையின் ஆசை; நீங்கள் செய்துதான் ஆகவேண்டும்" என்று சொல்லிப் பார்த்தான் மகன். ஆனால் அவர் அசைந்து கொடுப்பதாக இல்லை. "இஸ்லாத்தில் இதற்கு இடமேயில்லை; எனவே, வாய்ப்பில்லை!" என்றார் உறுதியாக.

மகனோ மீண்டும் மீண்டும் கேட்டுப் பார்த்தான். அந்தப் பணியாளர் கடைசியாகச் சொன்னார். "நான் சொன்னது, சொன்னது தான். வேண்டுமானால், நீ மார்க்க அறிஞர்களை; தீர்ப்பளிப்பாளர்களைக் கேட்டுவிட்டு வா; நான் சொல்வதைத் தான் அவர்களும் சொல்வார்கள்". அதன்படி அங்கு குழுமியிருந்தவர்களில் அறிஞர்களை, மார்க்க அறிஞர்களை அணுகிக் கேட்டபோது அவர்களும் அதையே சொன்னார்கள் "ஆமாம்! ஷரீஅத்தில் இதற்கு அனுமதி இல்லை தான்!"

இக் களேபரம் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில், வயது முதிர்ந்த ஒருவர், அந்த மகனை நெருங்கினார். "தம்பி, உன் தகப்பனார் அவரது சடலம் துணியிடும் வேளையில் உன்னிடம் சேர்ப்பிக்க வேண்டுமென்ற நிபந்தனையோடு ஒரு கடிதம் என்னிடம் தந்திருந்தார். அதை உன்னிடம் தரும் நேரம் இதுவென்று நினைக்கிறேன்" என்று கூறி ஒரு கடிதத்தை அவனிடம் கொடுத்தார்.

இறந்த அறிஞரின் நீண்டகால நண்பர் அவர். தனது தந்தையின் கடிதத்தை ஆவலுடன் வாங்கிப் படித்தான்மகன். அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது.

"என் மகனே! அனைத்து செல்வங்களையும் விட்டுவிட்டு இதோ நான் இறந்து விட்டேன். என் நிலைமையைப் பார்த்தாயா? என்னுடைய சொத்துக்களிலிருந்து ஒரே ஒரு பழைய காலுறையைக் கூட மேலதிகமாக என்னுடன் கொண்டு செல்ல முடியவில்லை; நாளை இந்த நிலை உனக்கும் வரலாம். இந்தப் பொருட்களும் செல்வங்களும் சொத்துகளும் இவ்வுலகிற்கு மட்டும் தான். ஆனால், இவற்றை, இந்தப் பொருட்களை நீ நேர்வழியில் ஈட்டி, நேர்வழியில் செலவழிப்பதன் மூலம் கிடைக்கிற அருள்வளம் இருக்கிறதல்லவா; அது, அந்த அருள்வளம் தான் மறு உலகிலும் உதவும். ஆகவே, இந்தச் செல்வங்களையும், சொத்துகளையும் இறைவழியில், மற்றவர்களின் வயிற்றுப் பசிக்கும், அறிவுப் பசிக்கும் உணவாகும் வகையில் செலவிடு. அப்படி செய்தால், இரு உலகிலும் ஆதாயம் பெற்றவனாக ஆவாய்!"

அந்த நிமிடம் வரை உள்ளத்தில் பெருகியிருந்த ஆணவமோ மமதையோ சடசடவென எரிந்து பொசுங்குவதைப் போன்ற உணர்வுடன் கண்களில் நீர் கோர்க்க, தந்தையின் சொற்களை உறுதிமொழி எடுத்துக் கொண்டான் மகன்.

'(மறுமையில் நன்மையின்) எடை கனத்தவர்களே வெற்றியாளர்கள்.' என்கிறது (திருக்குர்ஆன் 7:8) 'அல்லாஹ்வின் திருப்திதான் மிகப்பெரியது. அதுதான் மகத்தான வெற்றி.' (திருக்குர்ஆன் 9:72)


Friday, March 17, 2017

யார் அந்த அந்நியர்கள்..?

அல்லாஹ்வின் தீனிலிருந்து விலகி, உலகம் வழிகேட்டின்பால் அதீத வேகத்தில் சென்று கொண்டிருக்கும் ஒரு காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வழிகெட்ட மனிதர்கள் நம்பிக்கைக்குரியவர்களாக மதிக்கப்பட்டும், நேர்வழியிலுள்ளோர் வழிகேடர்களாக நோக்கப்பட்டும், பொய்யர்களின் கூற்று உண்மைப்படுத்தப்பட்டும், உண்மையாளர்களின் கூற்று இலகுவில் பொய்யாக்கப்பட்டும் விடுகின்றன. இத்தகைய புதுமையான யுகத்தில் தம் முன்னால் காணும் முரண்பாடுகளைப்பார்த்து புத்திஜீவிகளும் குழம்பிப்போயுள்ளனர்.

அல்லாஹ்வின் மார்க்கத்தைப் பின்பற்றக் கூடிய மக்கள், பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு சூழ்நிலைகளில், ஒரு விதமான உணர்வு நிலைக்கு தள்ளப் படுகின்றனர்.அதாவது அவர்களுக்கும் அந்த குறிப்பிட்ட சூழலுக்கும் சம்பந்தம் இல்லாமல் இருப்பது அல்லது அந்த இடத்தை விட்டு அல்லது அந்த சூழலை விட்டு வெளியேற நினைப்பது அல்லது தமக்கு விருப்பமில்லாத சூழலில் சிக்குண்டு கிடப்பதாக கருதுவது. இன்னும் சரியாக கூற வேண்டுமானால் அவர்களிலிருந்து வெளிப்பட்டு அந்நியமாக இருக்க விரும்புவது. இது சாதாரணமாக முஸ்லிம் அல்லாத சகோதரர்களுடன் கலந்திருக்கும் பொழுது உணரலாம். ஆனால் சில நேரங்களில் சக முஸ்லிம் சகோதரர்களிடம் இருக்கும் பொழுதும் இது போன்ற சிந்தனைகள் ஆட்கொள்கின்றன.

ஒரு முஸ்லிம் தனது சகோதர சகோதரிகளை இஸ்லாத்திற்கு முரணான காரியங்கள் செய்வதை பார்க்கும் பொழுது அல்லது இறை நிராகரிப்பின்/இணைவைப்பின் பக்கம் அழைத்து செல்லும் அவர்களின் சில நூதன செயல்களை காணும் பொழுது, அவர்களை தடுக்கக்கூடிய அதிகாரமோ அல்லது ஆற்றலோ தம்மிடம் இல்லையே என்று ஏக்கப்படுவான். இத்தகையவர்களை நேர்வழியின் பக்கம் அழைக்க, தங்களுடைய கருத்துக்கு ஒத்த கருத்துள்ள அல்லது தங்களுக்கு உதவி செய்யக் கூடியவர்கள் யாரும் இல்லாததைக் கொண்டு அவர்களுக்குள் ஒரு விதமான மனஅழுத்தம் ஏற்படுகின்றது. இத்தகைய சகோதர சகோதரிகள் (அல்லாஹ் அவர்கள் மேல் கருணை புரிவானாக) குர்ஆன் வசனங்கள் மற்றும் நபிமொழிகளைக் கொண்டு ஆறுதல் அடைந்து கொள்வார்களாக

உங்களுக்கு முன்னால் இருந்த சமுதாயங்களில் இந்த பூமியில் குழப்பங்களை தடுக்கக் கூடிய அறிவுடையோர் இருந்திருக்கக் கூடாதா? மிகக் குறைவாகவே தவிர (அவ்வாறு இருக்கவில்லை.) அவர்களை நாம் காப்பாற்றினோம். யார் அநியாயம் செய்தார்களோ அவர்கள் தங்கள் செல்லச் செருக்கையே பின்பற்றுகிறார்கள்; மேலும் குற்றவாளிகளாகவும் இருந்தார்கள்(11:116)

இந்த இறை வசனமானது, இந்த உலகில் மனித சமுதாயத்தை தீமையில் இருந்து தடுக்கும் சிலரை அதாவது மற்ற மக்கள் மத்தியில் மாற்றுக் கருத்துடைய அந்த அந்நியர்களை பற்றிப் பேசுகின்றது. இவர்களைப்பற்றி தான் இறை தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "அந்நியர்கள்" என்று குறிப்பிட்டு அவர்களுக்கு சுவர்க்கத்தைக் கொண்டு நற்செய்தி கூறுகின்றார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஸஹீஹ் முஸ்லிமில் பதிவாகியுள்ள கீழ்வரும் ஹதீத் இந்தக் அந்நியர்கள் யார் என்பதை தெளிவுபடுத்துகிறது. "இஸ்லாம் அந்நியமான ஒன்றாகவே ஆரம்பித்தது. அது மீண்டும் அந்நியமானதாக மாறிவிடும். ஆகவே அந்த அந்நியர்களுக்கு (அதாவது இஸ்லாத்தை அந்நியமான ஒன்றாக மக்கள் பார்க்கும்போது இஸ்லாத்தை சுமப்பவர்கள்) சுபசோபனம் உண்டாகட்டும்"

இந்த சிறப்புக்குரிய மக்கள் அந்நியர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். ஏனெனில், அவர்கள் மனித சமுதாயத்தில் சிறுபான்மையாக உள்ளனர். எவ்வாறு முஸ்லிமானவர்கள் ஒட்டு மொத்த மனித சமுதாயத்துடன் ஒப்பிடும் பொழுது அந்நியர்களாக கருதப் படுகின்றார்களோ மேலும் உண்மையான இறை அச்சமுள்ள நம்பிக்கையுள்ளவர்கள் மற்ற முஸ்லிம்களோடு ஒப்பிடும் பொழுது அந்நியர்களாக காட்சி அளிக்கின்றனரோ அவ்வாறே நபிவழியை பின்பற்றி, மற்ற முஸ்லிம்களின் நூதன செயல்பாடுகளிலிருந்து விலகி இருப்பவர்களும் அந்நியர்களாக கருதப்படுகின்றனர் .

மக்கள் நேர்வழியிலிருந்து தவறி வெவ்வேறு பிரிவுகளாகவும் மதங்களையும் பின் பற்றும் பொழுது அல்லாஹ் தனது தூதர் மூலமாக அவர்களிடத்தில் நேர்வழியான இஸ்லாமைக் கொண்டு அனுப்பி வைத்தான் . அவர்கள் யூதர்களாகவும் கிருத்தவர்கலாகவும் இறை நிராகரிப்பவர்கள்ளகவும் இருந்த நிலையில் அவர்களிடத்தில் இஸ்லாம் அறிமுகம் செய்யப் பட்ட பொழுது அது அவர்களுக்கு ஒரு விதமான புது விதமாக அந்நிய மார்க்கமாகவே தோன்றியது . இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்கள் அந்நியமானவர்களாகவே கருதப் பட்டார்கள் . அவர்கள் தங்கள் குடும்பத்தை விட்டும் சமூகத்தை விட்டும் இன்னும் ஊரை விட்டும் நாட்டை விட்டும் ஒதுக்கப் பட்டார்கள் .

உண்மையில் இவர்கள் தங்களின் நம்பிக்கையிலோ அல்லது செயல் முறைகளிலோ அந்நியர்கள் அல்ல. மாறாக இவர்களை அந்நியர்களாக ஒருவித தோற்றத்தை ஏற்படுத்துவது இவர்கள் சிறுபான்மையாக இருப்பதனாலேயாகும்.

'பொய் சொல்லும் ஒவ்வொரு பாவியின் மீதும், ஷைத்தான்கள் இறங்குகின்றனர்'

''எவர் மீது ஷைத்தான்கள் இறங்குகின்றனர் என்பதை நாம் உங்களுக்கு அறிவிக்கவா? பொய் சொல்லும் ஒவ்வொரு பாவியின் மீதும் ஷைத்தான்கள் இறங்குகின்றனர்.'' (அல்குர்ஆன் 26: 221, 222)

நல்லடியாபுகளில் பல பிரிவினர் உண்டு. நபிமார்களுக்கு அடுத்த இடத்தை "அல்லாஹ்வின் பாதையில் வெட்டப்பட்டு வீரமரணம்" அடைந்தோர் பெறுகின்றனர். அவர்களைப் பற்றி அல்லாஹ் தன் திருமறையில் "அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டோரை மரித்தவர்கள் என்று நிச்சயமாக நீங்கள் எண்ணாதீர்கள்!" தம் ரப்பினிடத்தில் (இறைவனிடத்தில்) அவர்கள் உயிருடனே இருக்கிறார்கள். (அவனால்) அவர்கள் உணவளிக்கப்படுகிறார்கள். (அல்குர்ஆன் 3:196)

அவர்கள் இறைவனிடமும் எவ்வாறு உயிருடன் உள்ளனர் என்பதை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விளக்கமுற்படும் போது, அவர்களின் உயிர்கள் பச்சை நிறத்துப் பறவைக் கூட்டுக்குள் நுழைந்து சுவனத்தில், தான் நினைத்தபடி சுற்றித்திரிகின்றன," என்று குறிப்பிட்டார்கள். (ஆதாரம் : முஸ்லிம் அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊது ரளியல்லாஹு அன்ஹு.

இத்தகைய உயர்ந்த நிலையை அடைந்துள்ள ஷஹீதுகள் தங்களுக்கு கிடைத்த இந்தபெரும் பேறை, உலகுக்கு வந்து சொல்லிவிட்டு திரும்புவதற்காக அல்லாஹ்விடம் அனுமதி கேட்டனர். அல்லாஹ் "உங்கள் சார்பாக உங்கள் நிலையை நான் உலகமக்களுக்கு அறிவிக்கிறேன்" என்று கூறி மேற்கூறிய வசனத்தையும், அதற்கு அடுத்து வருகின்ற இரண்டு வசனங்களையும் இறக்கினான்" என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விளக்கம் தந்தனர். ஆதாரம் : அபூதாவூது அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு

மேற்கூறிய இரண்டு நபிமொழிகளும் "அல்லாஹ்வின் பாதையில் வெட்டப்பட்டு வீரமரணம் அடைந்தவர்கள் சுவனத்தில் பறவை வடிவத்தில் வாழ்கின்றனர் என்பதையும், அவர்கள் இந்த உலகுக்கு வந்து உடனே திரும்பிச் செல்ல அனுமதி கேட்டும் அல்லாஹ் அதற்கு அனுமதிக்கவில்லை" என்பதையும் நமக்குத் தெளிவாக்குகின்றன,

"அதில் அவர்கள் என்றென்றும் தங்கி இருப்பார்கள். அவர்கள் அதிலிருந்து வேறிடம் செல்ல விரும்ப மாட்டார்கள்" (அல்குர்ஆன் 18:108)

அல்லாஹ்வின் பாதையில் வெட்டப்பட்டோரின் உயிர்கள் இந்த உலகுக்கு வரமாட்டா என்று தெளிவாகின்றது. ஏனைய நல்லடியார்களின் நிலைபற்றி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளதைப் பார்ப்போம்.

கப்ரில் நல்ல மனிதனை வைக்கப்பட்டு அவனிடம் விசாரணைகள் முடிக்கப்பட்டவுடன் அவனுக்கு உரிய இடத்தைக் காட்டி "இதுவே கியாமத் வரை உனது தங்குமிடமாகும்" என்று மலக்குகள் கூறுவர் (நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) ஆதார நூல் : புகாரி, முஸ்லிம் அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு

"கப்ரில் மனிதன் வைக்கப்பட்டு விசாரணை முடிந்த உடன் நான் எனது குடும்பத்தினரிடம் சென்று எனக்குக் கிடைத்த மகத்தான வாழ்க்கை பற்றி கூறிவிட்டு வருகிறேன்" என்று கேட்பார். (பேசாமல்) புதுமணமகனைப் போல் அயாந்து உறங்குவீராக! என்று அவருக்குக் கூறப்படும். (நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) ஆதார நூல் : புகாரி, முஸ்லிம் அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு

கப்ரில் வைக்கப்பட்டு விசாரணை முடிந்த பின் சுவனத்து ஆடை அணிவிக்கப்பட்டு, சுவனத்து விரிப்பு விரிக்கப்படும். சுவனத்தின் நறுமணம் அவர்களை நோக்கி வீசிக் கொண்டிருக்கும். (நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) (ஆதார நூல் : அபூதாவூது, அறிவிப்பவர்: பரா, இப்னு ஆஸி)

மேற்கூறிய நபிமொழிகளிலிருந்து இறந்துவிட்ட நல்லடியார்கள் "சிலர் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளனர்" என்றும், "இன்னும் சிலர் மண்ணறையிலேயே சுவனத்து இன்பங்களில் திளைத்துக் கொண்டுள்ளனர்" என்றும் அவர்கள் இவ்வுலகுக்கு வந்து செல்ல அனுமதி கேட்டும் அவர்களுக்கு அனுமதி தரப்படமாட்டாது என்பதையும் தெளிவாகவே நம்மால் விளங்க முடிகின்றது.

இறந்துபோன நல்லடியார்கள் எவரும் திரும்பவும் இந்த உலகுக்கு விஜயம் செய்கிறார்கள் என்றோ, இன்னொருவர் உடலுக்குள் வந்து புகுந்து கொள்கின்றனர் என்றோ, யாரேனும் நம்பினால் மேற்கூறிய அல்லாஹ்வின் வசனங்களுக்கும், நபிமொழிகளுக்கும், மாறு செய்த மாபெரும் குற்றவாளியாகின்றனர்.

மனிதனது உடலக்குள் புகுந்து கொண்டு ஆள்மாறாட்டம் செய்வது ஷைத்தான்தான், நல்லடியார்கள் அல்ல. பொய் சொல்கின்ற, தீய செயல்கள் செய்கின்றவர்கள் மீது தான் ஷைத்தான்கள் இறங்குகின்றனர் என்ற அல்லாஹ்வின் கூற்றுக்கு ஏற்ப, இன்று பேயாடுவோர், பல்வேறு இறை கட்டளைகளை உதாசீனம் செய்தவர்களே அவர்களையே ஷைத்தான் ஆட்டுவிக்கிறான்.

அழியாத பெருவாழ்வை அடைந்துள்ள நல்லவர்கள், அழிந்துவிடக் கூடிய இந்த அற்ப உலகத்துக்கு எப்படி வருவார்கள்? நாம் கூப்பிட்ட குரலுக்கு ஓடிவரக் கூடிய நிலையில் அவர்கள் இல்லை.

"அல்லாஹ் மீது நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்தவர்களுக்கு "பிர்தவ்ஸ்" என்னும் சுவாக்கம் தங்குமிடமாக உள்ளது. அதில் (அவர்கள்) என்றென்றும் நிலைத்திருப்பாகள். அங்கிருந்து (வேறிடம்) திரும்பிச் செல்ல அவர்கள் விரும்பமாட்டார்கள். (அல்குர்ஆன்)

ஈமான் எனும் இறைநம்பிக்கை


தினம் ஒரு நபி மொழி

'எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்துவிட்டனவோ அவர் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் சுவையை உணர்ந்தவராவார். (அவை) அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒருவருக்கு மற்றெதையும் விட அதிக நேசத்திற்குரிய வராவது, ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது, நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பது போல் இறை நிராகரிப்புக்குத் திரும்பிச் செல்வதை வெறுப்பது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்.
(ஸஹீஹுல் புகாரி: 16. , அத்தியாயம்: 2. ஈமான் எனும் இறைநம்பிக்கை)


"உலகில் கடைசி வரை நிலைத்திருக்கக்கூடிய மார்க்கம் இஸ்லாம் மட்டுமே" - பெர்னாட்ஷா


உலகில் எத்தனையோ மதங்கள் உள்ளன. கடவுளே இல்லை என்று சொல்லக்கூடிய கொள்கைகளும் மக்களை குழப்பிப் பார்க்கின்றன. ஆனால், இவற்றுள் இஸ்லாம் என்ற மார்க்கம் – கொள்கை, மிகப் பழமையானதும் அதே நேரம் மிக இளமையானதும் ஆகும்.

பழமையானது – உலகின் முதல் மனிதன் தொடங்கி உலகில் தோன்றிய அத்துணை நபிமார்களும் ஓரிறைக் கொள்கையையே போதித்தனர். ஆதலால், உலகின் பழமையான மார்க்கம் இஸ்லாமே.

இளமையானது – முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான் இவ்வுலகிற்கு வந்த இறுதி நபி. அவர்களே முந்தைய நபிமார்களை மெய்ப்படுத்தி, ஓரிறைக் கொள்கையை அழுத்தமாகவும், ஆதாரபூர்வமாகவும் எடுத்து மக்களுக்கு போதித்தார். ஆதலால், இஸ்லாமே அனைத்திலும் இளமையானது.

1400 ஆண்டுகளுக்கு முன்பு, அரேபியப் பாலைவனத்தில் ஊறத் தொடங்கிய இஸ்லாம் எனும் சத்திய ஊற்று, இப்போது உலகம் முழுவதும் கடலென பரவிக் கிடக்கின்றது. வாளால் பரவிய மார்க்கம் என்று ஊடகங்கள் ஓயாது ஒலித்தாலும், அதற்கான பதிலை தன்னகத்தே பிரதிபலித்துக் கொண்டு, சில ஆண்டுகளுக்கு முன்பு வரை உலகின் இரண்டாவது பெரிய மதமாக (மார்க்கம்) இருந்த இஸ்லாம், இந்த ஆண்டு உலகின் மிகப்பெரிய மார்க்கமாக கத்தோலிக்க கிறிஸ்துவத்தை தாண்டி வளர்ந்துள்ளது.

உலக மக்கள் தொகையில், 19.2 விழுக்காடு முஸ்லிம்கள் எனவும், 17.4 விழுக்காடு கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் என்றும் கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் தலைவராக உள்ள “போப்” பின் ஆளுகைக்குட்பட்ட வாடிகன் நகரத்தில் இருந்து வெளிவரும் லொசெர்வேடோர் ரொமானோ (L’Osservatore Romano) என்ற செய்திப் பத்திரிகை தெரிவிக்கின்றது.

உலக மக்கள் தொகையில் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை 113 கோடி மக்களாவர்; முஸ்லிம்களின் எண்ணிக்கை 130 கோடி எனவும் அப்பத்திரிகை தெரிவிக்கின்றது. வாடிகன் 2008 க்கான ஆண்டுப்புத்தகம் (Year Book) -இல் வெளியிடப்பட்டுள்ள இந்த புள்ளி விபரத்தை மேற்கத்திய உலகின் பெரும்பாலான செய்தி ஊடகங்களும் வெளியிட்டுள்ளன. இச்செய்தி உலகில் வேகமாக வளர்ந்து வரும் மார்க்கம் இஸ்லாம் (Fastest-growing religion) என்பதை நமக்கு ஆதாரத்தோடு தருகின்றது.

தொழுகையினால் ஏற்படும் பயன்கள் - அமெரிக்க ஆய்வில் வெளியாகியுள்ள தகவல்

மனிதனின் அகத்தில் தோன்றும் கவலை சோர்வு கலக்கம் போன்ற வற்றிற்கு தொழுகை சிறந்த மருந்தாகவும் நிவாரிணியாகவும் இருப்பது போல் முதுகு வலி மூட்டு வலிகள் போன்ற வற்றிர்கும் சிறந்த நோய் நிவாரிணியாக தொழுகை அமைந்துள்ளது என அமெரிக்க நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது

அமெரிக்காவின் பென்சில்வெனியா பல்கலை கழம் ஒன்று இந்த ஆய்வில் இறங்கியது

முதுகுவலி, மூட்டுவலிகள் தொழுகையை பேணகுடியவர்களிடம் மிக குறைவாக இருப்பதாக ஆய்வின் போது அவர்கள் கண்டறிந்தனர்

அது போன்று தொழுகையில் செய்யபடும் ஸஜதா மற்றும் ருகூஹ் போன்றவைகள் நரம்புகளையும் எலும்புகளையும் வலுபடுத்துவதாகவும் அவைகளில் உருவாகும் வலிகளை போக்குவதாகவும் கண்டறிந்தனர்

மொத்ததில் சிறந்த இயர்க்கை நிவாரணத்தை வழங்கும் சிறப்பான யோகா தொழுகை எனவும் கூறியுள்ளனர்

மறுமை வெற்றி வழிவகுக்கும் தொழுகை நமது உடல் ஆரோக்கியத்திற்கும் உகந்ததாக அமைந்துள்ளது

மறுமை வெற்றி இலக்கு என்றாலும் கவலைகளுக்கும் வேதனைகளுக்கும் மருந்தாகும் தொழுகையை பேணுவோம்

இஸ்லாத்தை உண்மைப்படுத்திய, டெங்கு பற்றிய ஆய்வு

டெங்கு நுளம்பின் தாக்கம் காரணமான இலங்கையின் பல பாகங்களிலும் டெங்கு காய்சல் ஏற்பட்டு மரணங்கள் சம்பவித்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் டெங்குவை கட்டுப்படுத்த சுற்றுச் சூழல் தூய்மை தொடர்பாக விளிப்புணர்வுகள் நடைபெற்று வருகின்றன. சுற்றுச் சூழலை தூய்மையாக வைத்திருத்தல் டெங்கு நோய் பரவாமல் இருப்பதற்கு முக்கிய காரணியாக இருந்தாலும், சூழல் அடிக்கடி மாசடையாமல் இருக்கும் வகையிலான நிரந்தர தீர்வுகளையே நாம் முன்னெடுக்க வேண்டும்.

தவளைகள் எண்ணிக்கை  குறைந்ததால் கொசு மற்றும் நுளம்புகள் கட்டுக்கடங்காமல் பெருகி டெங்கு உள்ளிட்ட நோய்கள்  வேகமாக பரவி வருவதாக சுற்றுச்சூழல்  ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.  நுளம்புகளினால் பரவும் டெங்கு நோய் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகின்றன. இதில் டெங்கு காய்ச்சலுக்கு ஏராளமானவர்கள் பலியாகிவிட்டனர். பெரியவர்கள், மாணவர்கள், பெண்கள், குழந்தைகள் என்ற பாகுபாடு இல்லாமல் டெங்கு பரவி வருகிறது.

இந்தளவு டெங்கு பரவுவதற்கு காரணம், ஏடிஸ் ஏஜிப்டி ரக நுளம்புக் கொசுக்கள் கட்டுக்கடங்காமல் பெருகியதுதான். இந்த நிலையில், ஆசிய டைகர் எனப்படும் புதிய ரக நுளம்புகளும் டெங்குவை பரப்புவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏடிஸ் ஏஜிப்டி ரக நுழம்புகள் வீட்டுக்குள் தேங்கி இருக்கும் தண்ணீரில் உருவாகும். ஆனால், ஆசிய டைகர் ரக நுளம்புகள் திறந்த வெளியில் தேங்கி இருக்கும் தண்ணீரில் முட்டையிட்டு பெருகுகிறது.
இதே நேரம் நுளம்புகள் அதிகமாக உற்பத்தி ஆவதற்கு  காரணம்; தவளைகள் எண்ணிக்கை  கணிசமாக குறைந்ததுதான்  என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கண்டுபிடித்துள்ளனர். தவளைகள் எண்ணிக்கை குறைந்ததால் நுளம்புக் கொசுக்கள் அதிகமாக பெருகிவருகிறது. தவளைகள் அதிகமாக இருந்தால்  தண்ணீரில் மிதக்கும் நுளம்பு மற்றும் கொசுகளின் லாவாக்களை அவை  சாப்பிட்டுவிடும். டெங்கு தாக்கம் தொடர்பில் அண்மையில் இந்தியாவின் டெல்லியில் நடைபெற்ற ஆய்வில் இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் தவளைகளே இல்லை என்று தெரியவந்துள்ளது. இதனால், தவளைகளை காப்பாற்ற வேண்டும் என்று இந்திய சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதே போல் தற்போது இலங்கையிலும் டெங்கு வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் டெங்குவின் வேகத்தை கட்டுப்படுத்துவதற்கு தவளைகளை வளர்த்து பாதுகாப்பது மிகவும் பயன்தரும். அரச தரப்பு இதற்கு உரிய தீர்வுகளை எட்ட வேண்டும்.

இஸ்லாத்தை உண்மைப்படுத்திய டெங்கு பற்றிய ஆய்வு

டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்துவதற்கு தவளை வளர்ப்பு மிக முக்கியமானது என்று டெல்லியை சேர்ந்த ஆய்வாளர்கள் தமது முடிவை வெளியிட்டுள்ளார்கள். 1400 ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்களின் நன்மை கருதி தவளையை அழிப்பதை இஸ்லாம் தடை செய்து விட்டது.
நபி (ஸல்) அவர்கள்  தவளையை கொல்வதை தடைசெய்தார்கள்.
நூல் : தாரமீ (1914)
நபிகள் நாயகம் (ஸல்)  அவர்கள் தவளைகளை கொல்வதை  தடை செய்துள்ளார்கள் என்று  மேற்கண்ட ஆதாரப்பூர்வமான  செய்தி தெளிவுபடுத்துகின்றது.
தவளைகளால் எப்படிப்பட்ட நன்மைகள் விளைகின்றன என்பதை அன்றைய கால மக்கள் அறிந்திருக்கவில்லை. ஆனால் தற்போது நம்மால் அறிந்து கொள்ள முடிகின்றது. இஸ்லாம் இறைவனின் மார்க்கம்தான் என்பதை மேற்கண்ட ஆய்வு முடிவுகள் உண்மைப்படுத்துகின்றன. அப்படியானால் தவளைகளின்  காரணமாக ஏற்படும் நன்மைகளை கருத்தில் கொண்டுதான் அல்லாஹ்வுடைய தூதர் அவர்கள் தவளைகளைக்  கொல்ல வேண்டாம் என்ற கட்டளையை பிறப்பித்துள்ளார்கள்.